×

தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெள்ளி விற்பனை குறைவு, கிலோவுக்கு 2,300 சரிவு: பொங்கல் வரை டல் அடிக்கும்

சேலம்: தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெள்ளி விற்பனை குறைந்ததால், கிலோவுக்கு 2,300 சரிந்துள்ளதாக வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்திலேயே சேலத்தில் தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இதை தவிர தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. சமீப காலமாக வெள்ளிக்கட்டியின் விலை நிலையாக இல்லாமல், அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விலை அதிகமாக வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகளுக்கு, விலை இறங்கும்போது நஷ்டம் ஏற்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஓரளவுக்கு வெள்ளி வியாபாரம் அதிகரித்தது. அப்போது விலையும் உயர்ந்தது. தற்போது வியாபாரம் இல்லாததால் வெள்ளி விலை படிப்படியாக சரிந்து வருவதாக வெள்ளி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது:  சேலத்தில் சிவதாபுரம், பனங்காடு, பள்ளப்பட்டி, திருவாக்கவுண்டனூர், கந்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிபட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த தீபாவளி பண்டிகையின்போது தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் வந்தது.

இதனால் வழக்கத்தை காட்டிலும் தீபாவளி பண்டிகையின்போது 30 சதவீதம் விற்பனை அதிகரித்தது. தீபாவளிக்கு பிறகு வியாபாரம் சரிய தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது சேலத்தில் ஒரு கிலோ வெள்ளி 39,500க்கு விற்றது. இது படிப்படியாக குறைந்து தற்போது கிலோவுக்கு 2,300 வரை சரிந்து, 37,200 என விற்கப்படுகிறது. வெள்ளி விற்பனை சரிந்ததால், தொழிலாளர்களுக்கு பாதிநேரம் மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால், அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மீண்டும் பொங்கல் பண்டிகையில் தான் வியாபாரம் சுறுசுறுப்படையும். அதுவரை வெள்ளி வியாபாரம் மந்தமாக தான் இருக்கும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

* வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி தமிழகத்திலேயே சேலத்தில்தான் அதிகம் செய்யப்படுகிறது.
* ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு சேலத்தில் இருந்து வெள்ளி பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன.
* தீபாவளியின்போது வழக்கத்தை விட 30 சதவீதம் ஆர்டர் அதிகம் வந்தது. தற்போது ஆர்டர் குறைந்து விட்டது.
* வெள்ளி விலை குறைந்தாலும், பொங்கல் பண்டிகை வரை டல் அடிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Diwali ,Pongal , Deepavali festival, silver, less, pongal
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா