×

திண்டுக்கல்லில் நிரம்பி வழியும் மாவூர் அணை : தூர்வாராததால் தண்ணீர் வீணாக செல்லும் அவலம்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மாவூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொடைரோடு, பள்ளப்பட்டி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி, காமலாபுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்காகவும் 20 ஆண்டுகளுக்கு முன் சிறுமலை அடிவாரத்தில் மாவூர் அணை கட்டப்பட்டது. ஒரு கி.மீ., நீளத்தில் 25 அடி உயரத்தில் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை போதிய பராமரிப்பின்றி தூர்வாராமலும், மரங்கள் வளர்ந்தும் காணப்பட்டது. கடந்த வாரம் வரை அணையில் தண்ணீர் இல்லாத நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட தொடர் கனமழையால் அணை முழு கொள்ளளவை எட்டியது.

பல ஆண்டுகளாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் அணையில் குறைந்த அளவிலான தண்ணீரே தேங்கியுள்ளது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மதகுகளைத் திறந்ததால் இப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் அணையில் இருந்து வெளியேறிய நீர் சாலைகளில் ஓடியதால் திண்டுக்கல் நெடுஞ்சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை மதகுகள் மூடப்படாத நிலையில், அணையில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் அணையை தூர்வாரி முறையாக தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dindigul,Mavoor Dam,Water,Heavy rain
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...