×

தேசிய அளவில் வலுவான அணி உருவாக ஸ்டாலினுடன் சந்திரபாபு சந்திப்பு: ‘பாஜவை வீழ்த்த இணைந்துள்ளோம்’, பேச்சுக்கு பின் இரு தலைவர்களும் பேட்டி

சென்னை: பாஜவுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை உருவாக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜவை  வீழ்த்த இணைந்துள்ளதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.  தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலம் முதல் இந்த  நிலை தொடர்ந்து வருகிறது. பிரதமராக வாஜ்பாய், வி.பி.சிங் போன்றவர்களை உருவாக்குவதில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார். அதே போல சோனியா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தேசிய தலைவர்களிடம்  ஒருமித்த கருத்தை கருணாநிதி உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் பதவி ஏற்பதிலும் முக்கிய பங்காற்றினார்.

கருணாநிதியை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பாஜவுக்கு எதிராக  வலுவான அணியை அகில இந்திய அளவில் உருவாக்க மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.  அதேநேரத்தில், பாஜவுக்கு எதிராக புதிய அணியை உருவாக்க ஆந்திர முதல்வரும் தெலுங்குதேச தலைவருமான சந்திரபாபு  நாயுடுவும் தீவிரம் காட்டி வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசுடன் தெலுங்குதேசம் இணைந்திருப்பது அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 அதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சரத்பவார், பரூக் அப்துல்லா, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட மூத்த  அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்காக நேற்று மாலை சென்னை வந்தார். இரவு 7.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்வார்பேட்டையில் உள்ள  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக முன்னணியின் வரவேற்றனர். பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை  அணிவித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். சந்திரபாபு நாயுடுவுடன் ஆந்திர அமைச்சர்கள் ராமகிருஷ்ணடு, கலா வெங்கட்ராவ், சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ், ஆனந்த  பாபு, ரமேஷ் எம்பி ஆகியோர் உடன் வந்திருந்தனர். சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்றிரவு மு.க.ஸ்டாலின் வீட்டில் விருந்தளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பது  தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 சந்திப்புக்குப் பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது: நான் இங்கே வந்தது, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஜனநாயகத்தை காப்பாற்ற அழைப்பு விடுப்பதற்காக தான். இந்த நாட்டில் தன்னிச்சையாக  செயல்பட வேண்டிய சிபிஐ, ஆர்.பி.ஐ(ரிசர்வ் வங்கி), வருமானவரித்துறை போன்ற துறைகள் மீது மத்திய அரசு இதுவரை இல்லாத அளவு ஆதிக்கத்தை செலுத்தி சீரழித்து வருகிறது. மற்றவர்களை துன்புறுத்துவதற்காக  பயன்படுத்தப்படுகிறது. எனவே இதிலிருந்து நாட்டை மீட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவது அனைவரின் கடமை ஆகும்.  இதற்காக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.  ஏற்கனவே நான் இந்த முயற்சியில் பல தலைவர்களை சந்தித்து இது குறித்து பேசி இருக்கிறேன். அனைவரும் எனது கருத்தை ஏற்றுகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்து நான் மம்தாவை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். ராகுல் காந்தியுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் பா.ஜ.கவை வீழ்த்த ஜனநாயகத்து மேல் அக்கறை கொண்டு இணைந்து செயல்பட அவரையும் சந்தித்தேன்.  வராக் கடன் அதிகரித்து விட்டது. பாஜக ஆட்சியால் மக்கள் பயனடையவில்லை. பண மதிப்பிழப்பு செய்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது. அதனால் கிடைத்த பலன் என்ன? கருப்பு பணம் அனைத்தும் வெள்ளை  பணமாக மாறியுள்ளது. இதனால் விஜய்மல்லையா, நிரவ்மோடி ஆகியோர் பலன் பெற்று நாட்டை விட்டு ஓடிவிட்டனர். யாரிடம் பணம் உள்ளது. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். திமுகவுக்கும் எங்களுக்கும் நல்ல நட்பு  உள்ளது. கருணாநிதியுடன் நான் 1996முதல் நெருங்கி பழகி வருகிறேன்.

  இந்த நாட்டில் மதம், சமூகம் எல்லாம் மோசமான நிலையில் உள்ளது. அதை மாற்ற தான் முயற்சி செய்து வருகிறோம். ஜனநாயம் நிலை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மம்தா, கர்நாடகாவில்  தேவகவுடா எல்லோரும் மிகவும் வலிமை பெற்ற தலைவர்களாக உள்ளனர். நேற்று முன்தினம் நான் குமாரசாமியை சந்தித்தேன்.
 இந்த ஆட்சியின் அவலங்களை டெல்லியில் உள்ள ஊடகங்கள் வெளியிட பயப்படுகின்றனர். ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களும் இதைதான் எதிர்பார்கின்றனர்.
 இவ்வாறு சந்திரபாபு கூறினார்.
இதனையடுத்து ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவை வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். அப்போது, வீட்டுக்கு வெளியே தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். இதனால் காரில்  தொங்கியபடி, தொண்டர்களைப் பார்த்து கையை காட்டியபடியே சிறிது தூரம் சென்றார். அதன்பின்னர் அவர் காருக்குள் அமர்ந்து நேராக விமானநிலையம் சென்றார். அங்கிருந்து ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் துரை முருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி, ஆர்.ராசா, ஜெகத்ரட்சகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

‘பிரதமராக ஆசையில்லை’நிருபர்கள் கேள்விக்கு சந்திரபாபு நாயுடு அளித்த பதில்கள்:
உங்கள் அணியில் யாரை பிரதமராக முன்னிறுத்துவீர்கள்? எங்கள் அணியில் உள்ள எல்லோரும் சிறந்த தலைவர்கள். உண்மையில் மோடியை விட ஸ்டாலின் சிறந்த ஆற்றல் மிக்க தலைவராக விளங்குகிறார். நீங்கள் பிரதமராக  ஆவதற்காக தான் இதை செய்கிறீர்களா? நான் பிரதமராக வருவதற்கு ஆசைபடவில்லை. எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவே பாடுபடுகிறேன். அனைத்து  கட்சிகளையும் ஒரு  அணியில் சேர்ப்பது தான் எனது நோக்கம். அதற்கான  ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுகிறேன். நாட்டை வழி நடத்துவது யார் என்று  எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்வோம்.

இருவரும் என்ன பேசினீர்கள்? கிருஷ்ணா நீர், கோதாவரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவருவது குறித்து பேசினோம். தமிழக அரசு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா? அது எங்கு  இருக்கிறது? டெல்லியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Chandrababu ,team ,Stalin ,Bhaj , Chandrababu,Stalin bjp
× RELATED அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுலா...