×

ஜுன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு; கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: வாக்குப்பதிவு முடிந்தபின் கருத்துக்கணிப்பு ரிலீஸ்

புதுடெல்லி: மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் வரும் ஜூன் 1ல் நடப்பதால், நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் வெளியாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில், ஏற்கனவே 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம், 69.16 சதவிகிதம், 63 சதவிகிதம் மற்றும் 61.22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த கட்டத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 57 தொகுதிகளில், பீகாரில் 8 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கண்ட 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். நாளை மாலையுடன் (மே 30) மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

இத்துடன் ஒடிசாவில் 41 தொகுதிகளிலும் பேரவை தேர்தல் நடப்பதால் அங்கும் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், 7 கட்டங்களாக பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக ஜூன் 2ம் தேதி அருணாச்சல் பிரதேசம், சிக்கிமில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின் 7 கட்டமாக நடந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post ஜுன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு; கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: வாக்குப்பதிவு முடிந்தபின் கருத்துக்கணிப்பு ரிலீஸ் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED புதிய நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான பதிவு கவுன்டர்கள் திறப்பு