நெல்லை: மஹா புஷ்கர விழாவின்போது நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் விட்டுச்சென்ற காசுகளை தண்ணீரில் அலசி தேடும் பணியில் மதுரையில் இருந்து வந்துள்ள பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கும்பல் ஈடுபட்டனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு மஹா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11ம் தேதி பாபநாசத்தில் துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை கடந்த 23ம் தேதிவரை 13 நாட்கள் கோலாகலமாக இவ்விழா நடந்து முடிந்துள்ளது.
இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய தீர்த்த கட்டங்களான பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், நெல்லை தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, மணிமூர்த்திஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில், அருகன்குளம், ஜடாயு தீர்த்தம், மேலநத்தம், சீவலப்பேரி, முறப்பநாடு, அகரம் (வல்லநாடு), ஆழிக்கூடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரங்கணி, ஏரல், ஆத்தூர், சேர்ந்த பூ மங்கலம், புன்னகாயல் உள்ளிட்டவற்றில் உள்ளூர், வெளியூர், மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த துறவிகள், சாதுக்கள், சாமியார்கள், மடாதிபதிகள், பக்தர்கள் என 50 லட்சத்துக்கும் அதிகமானோர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். தாமிரபரணி மஹா புஷ்கரத்தில் புனித நீராடியவர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.
மேலும் செல்வந்தர்கள் பலர், தாமிரபரணியில் நீராடிய போது ரூ.5, ரூ. 10 நாணயங்களை தண்ணீரில் சமர்ப்பித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த நாணயங்கள் தண்ணீரின் அடியில் கிடக்கும் என்ற நம்பிக்கையில், நதியில் நீராடிய பெண்கள்கூட தங்க நகைளை தெரியாமல் விட்டு சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது மஹா புஷ்கர விழா முடிந்துள்ள நிலையில் பக்தர்கள் பயமின்றி ஆழம் தெரியாமல் குளிக்க படித்துறைகளின் அருகே தண்ணீரில் பரப்பி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் நேற்று அகற்றப்பட்டன. இந்த மணல் மூட்டைகளின் அடியில் நாணங்கள், தங்க நகைகள் இருக்கலாம் என எதிர்பார்த்து மதுரையில் இருந்து 10க்கும் மேற்பட்ட கும்பல் புஷ்கர விழா நடைபெற்ற படித்துறைகளில் மணலை அள்ளி தண்ணீரை அங்குலம் அங்குலமாக அலசி, பக்தர்கள் விட்டுச்சென்றதாகக் கூறப்படும் காசுகளை தேடி வருகின்றனர். இதற்காக கண்களில் தண்ணீருக்குள் தேடி பார்க்கும் கண்ணாடி அணிந்தவண்ணம், சிறுவர்களும், பெண்களும் நாணயங்கள் மற்றும் நகைகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சிறுவர்களிடம் சிக்கிய 2பைசா நாணயங்கள்
மஹா புஷ்கர விழா நடைபெற்ற படித்துறைகளில் நாணயம், நகைகளை தேடினர். இதில் விளையாட்டுத்தனமாக தேடிய சிறுவர்களின் கைகளுக்கு மட்டும் 2 பைசா நாணயங்கள் சிக்கின. ஆனால் ரூ. 10, ரூ.5 நாணயங்களை தண்ணீரில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என சிறுவர்கள் ஏமாற்றத்துடன் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி