×
Saravana Stores

பி.எச்டி பட்டப்படிப்புகளுக்கு தகுதி தேர்வை ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம்: காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை கோரிக்கை

சென்னை: பிஎச்டி பட்டப்படிப்புகளுக்கான தகுதி தேர்வுகளை ரத்து செய்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் மாணிக்கவாசகம் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் பிஎச்டி பட்டப்படிப்பு படிப்பதற்கு நெட்-யுஜிசி தேர்வுகளை கட்டாயமாக்கியுள்ள ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் நேற்று சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாணிக்கவாசகம் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜ அரசு பிஎச்டி தேர்வு எழுதுவதற்கு நெட்- யு ஜி சி நுழைவுத் தேர்வை கட்டாயப்படுத்தியும், பட்டப்படிப்பு படிப்பதற்கு பல்கலைக்கழகத்தில் க்யூட் எனும் தகுதி தேர்வை நடத்தவும் கடந்த மார்ச் 24ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி கனவை பறிக்கும் செயலாகும். நீட் எனும் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து போய் உள்ளது. இந்நிலையில் பிஎச்டி மற்றும் பட்டப்படிப்பு படிப்பதற்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்துள்ள பாஜ அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என ரத்து செய்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பி.எச்டி பட்டப்படிப்புகளுக்கு தகுதி தேர்வை ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம்: காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Assembly ,Congress Committee Research Department ,Chennai ,Tamil Nadu Congress Committee Research Department ,Head ,Manikkavasakam ,Chief Minister ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED புதிய குழந்தை, விமர்சனம் அதிகம்...