×

தியோதர் டிராபி கிரிக்கெட் தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் பைனலுக்கு முன்னேறியது இந்தியா பி

புதுடெல்லி: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா பி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், இந்தியா பி - இந்தியா சி அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த இந்தியா பி அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன் குவித்தது. ஹனுமா விஹாரி அதிகபட்சமாக 76 ரன் (94 பந்து, 6 பவுண்டரி) விளாசினார். மயாங்க் அகர்வால் 24, பெய்ன்ஸ் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். உனத்காட் 15, நதீம் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமால் இருந்தனர்.
இந்தியா சி பந்துவீச்சில் குர்பானி, பப்பு ராய் தலா 3, விஜய் ஷங்கர் 2, ரெய்னா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சி அணி 48.2 ஓவரில் 201 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

சூரியகுமார் யாதவ் 39, ஷுப்மான் கில் 36, விஜய் ஷங்கர் 35, கேப்டன் அஜிங்க்யா ரகானே 32, வாஷிங்டன் சுந்தர் 19, நவ்தீப் சாய்னி 18 ரன் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்தியா பி பந்துவீச்சில் கவுதம், மனோஜ் திவாரி தலா 3, சாஹர் 2, உனத்காட், ஷ்ரேயாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 30 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா பி அணி, 2 போட்டியில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹனுமா விஹாரி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் முதல் போட்டியிலும் சிறப்பாக விளையாடி 87* ரன் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - இந்தியா சி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் பைனலில் இந்தியா பி அணியை சந்திக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Deodor Trophy Cricket Continues to Finale , Deodor Trophy, Cricket,
× RELATED சன்ரைசர்ஸ் அணிக்கு 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி