×

பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பெங்களூர் : மே 18 (நாளை) முதல் மே 21ம்தேதி வரை கர்நாடகா மாநிலத்தின் தென் பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நாளை மீண்டும் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலோ அல்லது 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றாலோ ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே சிஎஸ்கே அணிக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதே நேரத்தில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், 4வது இடத்தை பிடிக்க சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய வானிலை மையம், “மே 18 (நாளை) முதல் மே 21ம் தேதி வரை பெங்களூர் உட்பட கர்நாடகாவின் தென் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக’’ தகவல் வெளியிட்டுள்ளது. மே 18ஆம் தேதி மதிய நேரத்திலேயே கனமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் போட்டி நடக்குமா என்று சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஒருவேளை ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால், சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,CSK ,RCB ,Bengaluru ,Bangalore ,Karnataka ,CSK - RCB ,Chinnachami Stadium ,Dinakaran ,
× RELATED 19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்