×

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகல் இலங்கையில் புது கூட்டணியை தொடங்கினார் விக்னேஸ்வரன்

கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற புதிய கூட்டமைப்பை தொடங்கியுள்ளார். இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த மாகாணத்தின் முதல் முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அவரது 5 ஆண்டு பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்த கூட்டமைப்பு கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை புறக்கணித்து மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தது. அப்போது, தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக சிறிசேனா அளித்த உறுதியின் பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு  ஆதரவளித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வடக்கு மாகாண கவுன்சிலில் தனது இறுதி உரையை விக்னேஸ்வரன் ஆற்றினார். அப்போது, ‘`தமிழ் மக்களுக்கு அரசியல் சுதந்திரம் வழங்குவதாக உறுதியளித்த சிறிசேனா, அதை செய்ய தவறிவிட்டார்.  

தமிழ் மக்களுக்கு சொந்தமான 60 ஆயிரம் ஏக்கர் நிலம் இலங்கை ராணுவம் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இன்னும் உள்ளது. தமிழர்கள் விவகாரத்தில் முந்தைய அதிபர் ராஜபச்சேவுக்கும் தற்போதைய அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட மாகாணமாக விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதாக அறிவித்த கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றவில்ைல’’ என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, விக்னேஸ்வரன் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகினார். ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை தொடங்குவதாகவும் அறிவித்தார். இந்த கூட்டணியில் தமிழ் அரசியல் கட்சிகள் இடம் பெறும் என்று அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vigneswaran ,coalition ,Sri Lanka , Tamil National Alliance, Sri Lanka, vigneswaran
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு