காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்று காலை பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பலத்த ஓசையுடன் அடுத்தடுத்து 2 முறை வெடி சத்தம் கேட்டது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வு காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் உணரப்பட்டது. ஒரு சில இடங்களில் மாடி வீடுகள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் எம்இசிஎல் நிறுவனம் மூலம் ஆங்காங்கே பூமிக்கடியில் துளையிடும் பணிகள் நடந்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மூலக்கூறுகளை சோதனை செய்ய பூமிக்கடியில் வெடி வைத்திருக்கலாம், அதன் அதிர்வு காட்டுமன்னார்கோவில் பகுதியில் உணரப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.இதேபோன்று காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதுபற்றி மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீநாதாவிடம் கேட்ட போது, பயங்கர சத்தம் கேட்டதாக எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. அதுபற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.அதே சமயம் சத்தம் கேட்ட நேரத்தில் வானில் ஒரு ஜெட் விமானம் பறந்துள்ளது. தஞ்சையில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜெட் விமானங்கள் அடிக்கடி பயிற்சிக்கு புறப்பட்டு செல்லும். வானில் ஜெட் விமானங்கள் பறக்கும் போது ஏர் லாக் எடுப்பது வழக்கம். அப்போது சத்தம் அதிகளவில் உருவாகும். விமானம் சற்று தாழ்வாக பறந்ததால், மக்களுக்கு அதிகளவில் சத்தம் கேட்டுள்ளது என விமானப்படை தளம் தரப்பில் கூறப்பட்டது…
The post காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்று காலை பலத்த சத்தத்துடன் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.
