×

வர்தா புயலில் வேரோடு சாய்ந்த ஆலமரம் எழுந்து நின்ற அதிசயம் : கிராமமக்கள் பரவசம்

செய்யாறு: செய்யாறு அருகே வர்தா புயலில் வேரோடு சாய்ந்த ஆலமரம் மீண்டும் எழுந்து நின்ற அதிசயத்தால் கிராமமக்கள் பரவசம் அடைந்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா, பாவூர் கிராமத்தில் பச்சையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயலின்போது கோயிலின் பின்புறத்தில் இருந்த 30 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது.  அப்போது, கோயில் ஊழியர்கள் அந்த மரத்தின் கிளைகளை வெட்டினர்.

மரம் மட்டும் அங்கு கிடந்தது. இருப்பினும் மரத்தில் சிறிய கிளைகள் துளிர் விட தொடங்கியது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பூசாரி கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிக்கொண்டு இரவு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை 6 மணிக்கு பூசாரியின் மகன் கோயிலை திறக்க சென்றார். அப்போது கோயிலின் பின்புறம் வேரோடு சாய்ந்து இருந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மரத்தை தூக்கி நிறுத்தி வைத்தது போல் நேராக நின்று உள்ளது.

தகவலறிந்த கிராம மக்கள் கோயிலுக்கு விரைந்து வந்து அதிசயத்துடனும், பரவசத்துடன் அந்த மரத்தை பார்த்து வியந்தனர். அப்போது, சிலருக்கு அருள் வந்தது. அவர்கள், ‘நான் முனீஸ்வரனாக எழுந்து நின்று உள்ளேன். உங்களுடைய குறைகளை போக்க தான் நான் மீண்டும் எழுந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து, வேரோடு சாய்ந்து எழுந்து நின்ற ஆலமரத்திற்கு பக்தர்கள் மற்றும் கோயில் பூசாரி புத்தாடை கட்டி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து முனீஸ்வரனாக பாவித்து தீபாரதனை செய்து வழிபட்டனர். புயலில் சாய்ந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றதால் பக்தர்கள் தினமும் வந்து பச்சையம்மனையும்,   ஆலமரத்தில் உள்ள முனீஸ்வரனையும் வழிபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : windstorm , Varda Storm, Banyan, Village People
× RELATED இது இன்னோர் அதிசயம்