×

பரமக்குடியில் பலத்த மழை : தண்ணீரில் தத்தளிக்கும் பள்ளி, சாலைகள் சேதம்

பரமக்குடி: பரமக்குடியில் பெய்த கனமழையால் பள்ளி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் திடீர் பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பரமக்குடி கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இரண்டு மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்களால் வாறுகால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாறுகாலில் மழைநீர் செல்ல முடியாமல் கழிவுநீருடன் சாலைகளில் தேங்கியுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி முன்பாக திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மண்ணை கொட்டி சரி செய்தனர். எனினும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வகுப்பறைக்கு செல்லமுடியாத நிலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. முறையான வாறுகால் வசதிகளை செய்யாததால் தண்ணீர் பல இடங்களில் தேங்கி சுகாதாரக் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பரமக்குடியை சேர்ந்த பாண்டி கூறுகையில், “பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வாறுகால் மட்டுமே உள்ளது. தண்ணீரை கொண்டு செல்லமுடியாமல் கண்ட இடங்களில் கழிவுநீருடன் கலந்து சாலைகளில் ஓடுகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றார்போல் வாறுகால் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆகையால் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ஆர்.எஸ் மங்கலம் உப்பூர், திருப்பாலை, சோழந்தூர் மற்றும் ஆனந்தூர் பகுதிகளில் சிறிய அளவே மழை பெய்ந்தது.

விவசாய பணிகள் ஜரூர்

தொடர் மழையால் கிராம பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணியை தொடங்கி வருகின்றனர். விவசாய நிலங்களில் ஏற்கனவே நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது உரமிட்டு களை எடுக்கும் பணியை செய்து வருகின்றனர். பெண் விவசாயி முத்துச்செல்வி கூறுகையில், ‘‘தொடர்மழை காரணமாக நிலத்தடி நீரும் கண்மாய் நீரும் உயர்ந்து வருகிறது. வரும் மாதங்களில் மழை அதிகளவு பெய்ய வாய்ப்புள்ளது. மழையை நம்பியே இப்பகுதியில் விவசாயம் செய்யப்படுவதால் இந்த வருடம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : roads ,Paramakulam: School , Paramakkuti, rain, school
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...