×

சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதால் சாலை வெறிச்சோடியது: மீண்டும் மரக்கன்று நட பொதுமக்கள் வலியுறுத்தல்

திருமயம்: அரிமளம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப்படுவதால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.புதுக்கோட்டையில் இருந்து மிரட்டுநிலை, அரிமளம், கே.புதுப்பட்டி வழியாக ஏம்பல் செல்லும் சாலை மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சாலைகளில் ஒன்று. இந்த சாலை கண்மாய்க்கரை, வயல்கள், மரங்கள் ஊடாக செல்லும் சாலை என்பதால் சாலை ஒரு சில இடங்களில் குறுகளாக காணப்பட்டது. தற்போது இந்த சாலையில் அதிக அளவு வாகன போக்குவரத்து உள்ளதால் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பாக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் உள்ள பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படுவதோடு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அப்படியாக சாலையோரம் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மிரட்டுநிலை, அரிமளம் இடைப்பட்ட ஓனாங்குடி பகுதியில் சாலை விரிவாக்கம் பணியின்போது சாலையோரம் இருந்த சுமார் நூறு வருடம் பழமை வாய்ந்த 50-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

இது சாலையில் செல்போரை குடை போல் வெயில், மழை காலங்களில் காத்து வந்த நிலையில் தற்போது வெயில் சுட்டரிப்பதால் மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் சாலையில் செல்வோர் சாலை வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவித்தனர். இருந்த போதிலும் வேறு வழி இன்றி சாலை விரிவாக்கம் பணிக்காக மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சாலை விரிவாக்கம் பணி முடிவடைந்த பின்னர் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரம் மீண்டும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து மரமாக வளர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதால் சாலை வெறிச்சோடியது: மீண்டும் மரக்கன்று நட பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Puthukkottai ,Embal ,Mirattuthan ,K. Pudhupatti ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...