×

தமிழில் எழுத வந்தவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் மாணவர்கள், பெற்றோர் இரவு வரை போராட்டம் மதுரை நீட் தேர்வு மையத்தில் குளறுபடி வினாத்தாளை திரும்ப வாங்கியதற்கு எதிர்ப்பு

மதுரை : மதுரையில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுத வந்த 120 மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அவர்களுக்கு 5 மணி நேரம் தாமதமாக தனியாக தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்தவுடன் மாணவர்களின் வினாத்தாள்களை வாங்கி வைத்துக் கொண்டதை கண்டித்து இரவு வரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரை, நரிமேடு நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மையத்தில் நீட் தேர்வு எழுத 720 பேருக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் தேர்வு, இரு அறைகளில் துவங்கியது. அப்போது 120 பேருக்கு வினாத்தாள் இந்தியில் வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். தமிழில் நீட் தேர்வு எழுத வந்த தங்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது குறித்து அவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதனால், வினாத்தாள்களை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர். பகல் 1 மணிக்கு தேர்வு முடிந்து 600 மாணவ, மாணவிகள் வெளியேறினர். 120 மாணவர்கள் வெளியே வராததால் அவர்களது பெற்றோர் தேர்வு அறையை முற்றுகையிட்டனர். அதுவரை தேர்வு எழுதாமல் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் உணவின்றி தவித்தனர். பெற்றோர் கேள்வி எழுப்பியபின் 120 மாணவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

பின்னர், பிற்பகல் 3 மணியளவில் அவர்களுக்கு கேள்வித்தாளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து  தேர்வெழுதச் சொன்னார்கள். மாலை 6 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதனால், காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் மாலை 6 மணி வரை பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். 1 மணிக்கு தேர்வு முடித்து வெளியேற வேண்டிய மாணவர்கள், 5மணிநேரம் தாமதமாக மாலை 6 மணிக்கு தேர்வறையில் இருந்து வெளியே வந்தனர். தேர்வு முடிந்த மாணவர்களிடம் உடனடியாக அவர்களது வினாத்தாள்களை தேர்வு அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் சிபிஎஸ்இ அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வினாத்தாளை வழங்கினால்தான் பள்ளியை விட்டு வெளியேறுவோம் என்று கூறி இரவு 7 மணி வரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேர்வு அதிகாரி வெங்கடேசன் டெல்லி சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் பேசி விட்டேன். 15 நாட்களில் உங்கள் வீடுகளுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார். ஆனால், அதை ஏற்காமல் 120 மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பள்ளியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவியது.

சேலத்திலும் இந்தி வினாத்தாள்
சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் பள்ளியில் 780 மாணவ, மாணவியர் தேர்வெழுத மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் தமிழில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாள் இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள மையங்களுக்கு சென்று, கூடுதலாக இருக்கும் வினாத்தாளை கொண்டு வந்து, தலா 20 முதல் 30மாணவர்கள் என்ற வகையில் பிரித்து கொடுத்தனர். அவர்களுக்கு வினாத்தாள் கொடுத்த நேரத்தில் இருந்து 3மணி ேநரம் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது. இந்த குளறுபடியால் மதியம் 1 மணிக்கு முடியவேண்டிய தேர்வு, மாலை 4.30 மணியை கடந்தும் நடைபெற்றது. மாணவர்கள் இயற்கை உபாதைகளை போக்க முடியாமல் பரிதவித்த நிலையில், துணைக்கு வந்த பெற்றோரும் கொளுத்தும் வெயிலில் தத்தளித்தனர். இதனால் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags :
× RELATED பயண அட்டை தொலைந்துபோனால் இருப்பு...