×

தமிழக பாஜ கட்டுப்பாட்டில் உள்ள 4 வார் ரூம்கள் மூலம் கட்சி பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு: காயத்ரி ரகுராம் அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதாவின்  கட்டுப்பாட்டில் 4 வார் ரூம்கள் இருக்கிறது. இதன் மூலமாக கட்சியினரைப்  பற்றியே ஆபாசமாக சித்தரிக்கிறார்கள். வார் ரூமிற்காக நிறைய பணம் செலவு செய்கிறார்கள். பாஜ மேலிடம்  தரவில்லை. இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.   பா.ஜ.வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் கூறியதாவது:கலைத்துறையில் பணியாற்றி வந்த நான், பிரதமர் நரேந்திர மோடியின் செயல் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜவில் இணைந்தேன். கடந்த 8 ஆண்டுகளாக அந்த கட்சிக்காக பாடுபட்டேன். தனிப்பட்ட தாக்குதல்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் அனைத்தையும் கட்சிக்காக சந்தித்தேன். 6 ஆண்டுகளாக நல்ல தைரியத்துடன் இருந்தேன். அண்ணாமலை கட்சித் தலைவரானதில் இருந்து பாதுகாப்பின்மையை உணர்ந்தேன்.  ‘எனது அறையில் கண்ணாடி கதவு பொருத்தி இருக்கிறேன். நான் யாருடன் பேசினாலும் அது எல்லோருக்கும் தெரியும்’ என்று கூறிய அண்ணாமலை, அப்போது என்னை பற்றியும், குஷ்பு பற்றியும் சில வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி, ‘தவறான அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை. தவறாக நினைக்க வேண்டாம். அது குறித்து நீங்கள் ஒரு டிவிட் போட்டால் நன்றாக இருக்கும்’ என்றார். நானும் அப்போது அதை பெரிதாக நினைக்கவில்லை. காலப்போக்கில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத கட்சியாக பாரதிய ஜனதா மாறிவிட்டது. அதற்கு காரணம் அண்ணாலை. ஒரு பெண்ணுடன் பா.ஜ நிர்வாகி பேசிய ஆபாச வீடியோ வெளியானபோது அந்த பிரச்னையை சரியாக கையாளாமல் அதில் உள்ள சம்பந்தப்பட்ட பெண் பாதிக்கப்படுவாரே என்பது கூட தெரியாமல் அந்த வீடியோவை வெளியிடச் சொன்னார். திருச்சி சூர்யா, பாஜ கட்சியை சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்பு பற்றி ஆபாசமாக பேசினார். அவரை அழித்து விடுவதாக மிரட்டினார். அவரை கட்சியை விட்டு நீக்காமல் விலக்கி வைத்தார். இது போன்ற நிறைய ஆபாச வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இப்போது அண்ணன், தங்கை என்கிற சொல்கூட தவறாக போய்விட்டது. தமிழக பாஜ கட்டுப்பாட்டில் 4 வார் ரூம்கள் இருக்கிறது. இதன் மூலமாக கட்சியினரைப் பற்றியே ஆபாசமாக சித்தரிக்கிறார்கள். நான் எந்த விஷயத்தை டிவிட்டரில் பதிவிட்டாலும் அதற்கு ஆபாசமான கமென்டுகளை பதிவிட்டார்கள்.எனக்கு ஆதரவாக இருந்த பெண்களை எல்லாம் சேர்த்து சாக்கடை என்றார்கள். என்னை மீரா மிதுனுடன் ஒப்பிட்டார்கள். எனக்காக குரல் கொடுத்தவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டார்கள். வார் ரூமிற்காக நிறைய பணம் செலவு செய்கிறார்கள், அதில் பணியாற்றுகிறவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கிறார்கள். அது பாஜ மேலிடம் தரவில்லை. இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.  150 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அண்ணாமலை நேரடியாக என்னை பற்றி ஆபாசமாக பேசினார். கட்சியில் பெண்களை அவமதிக்கும் அண்ணாமலை அவர் குடும்பத்து பெண்களின் படங்கள்கூட வெளியுலகத்தில் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் என்னைப் போன்று துணிச்சலுடன் அரசியலுக்கு வரும் பெண்களை விரட்ட நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தமிழக பாஜ கட்டுப்பாட்டில் உள்ள 4 வார் ரூம்கள் மூலம் கட்சி பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு: காயத்ரி ரகுராம் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu party ,Gayathri Raghuram ,Chennai ,Tamil Nadu Bharatiya Janata Party ,Tamil Nadu BJP ,Gayatri Raghuram ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...