×

வேட்பாளர்கள் 21 பேரில் காங். கட்சிக்கு உழைக்காதவர்களை காட்டினால் நடவடிக்கை எடுக்க தயார்: கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 26 தலைப்புகள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்பு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், அரசு எப்படி நடைபெற வேண்டும், அரசின் நிர்வாகம் எப்படி செயல்படவேண்டும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகம், நல்ல கல்வி, விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்திவோம் என்று அறிவித்துள்ளது. அதிலிருந்து காங்கிரஸ் மாறுபடுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை சட்டப்படி நடக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினா கடற்கரை சாலையில் நிறுவ நடவடிக்கை எடுப்போம். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு தான் சீட் வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 பேரில் கட்சிக்கு உழைக்காதவர்கள் யாரும் இருந்தால், அப்படி யாராவது இருக்கிறார்கள் என்பதை பத்திரிகைகள் சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்க தயார். அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் மகன் தவிர்த்து யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீதமுள்ள 4 வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை (இன்று) வெளியிடப்படும். ராகுல்காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்….

The post வேட்பாளர்கள் 21 பேரில் காங். கட்சிக்கு உழைக்காதவர்களை காட்டினால் நடவடிக்கை எடுக்க தயார்: கே.எஸ்.அழகிரி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Congress ,KS Azhagiri Awesam ,Chennai ,Congress party ,Tamil Nadu assembly election ,Satyamurthy ,KS Alagiri Avesam ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்...