×

இலை கட்சியின் மாஜி மந்திரிகள் இரண்டு பேர் டென்ஷனில் இருக்கும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா

‘‘பூட்டு மாவட்டத்துல மாஜி மந்திரிகள் ஏன் கோபத்துல இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்ட இலைக்கட்சியில் ஊர்ப்பெயரை தனது பெயரின் முன்னால் கொண்ட 2 மாஜி மந்திரிகளும் எலியும், பூனையுமா இருக்காங்க. முன்னாள் ஷாக் மந்திரி துவக்கத்தில் தேனிக்காரர் பக்கம் இருந்தார். பின்னர் சேலத்துக்காரர் பக்கம் சாய்ந்தார். இரு மாஜி மந்திரிகள் மீதும் சேலத்துக்காரருக்கு என்ன சந்தேகமோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக தான் செல்லும் முக்கிய நிகழ்ச்சிகளில், பூட்டு மாவட்டத்தின் சந்தூரில் முடியும் தொகுதி மாஜி எம்எல்ஏவை உடன் அழைத்துச் செல்கிறாராம். வேண்டாம் என்றாலும் மாஜி எம்எல்ஏவும் வம்படியாக அவர் கூடவே செல்கிறாராம். இதனால் இலைக்கட்சியில் தற்போது மாவட்டத்தின் முக்கிய விஐபி பட்டியலில் மாஜி எம்எல்ஏ இடம் பிடித்துள்ளதாக, கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. எம்பி தேர்தலிலும் சீட் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இவரது செயல்பாடுகள் உளறல் முன்னாள் மந்திரிக்கு எரிச்சலை தந்துள்ளதால், இருவருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றொரு மாஜி மந்திரி எப்படி இவரை ஓரங்கட்டுவது என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். மேலும், மாஜி எம்எல்ஏ தனக்கு முக்கிய பொறுப்பு கேட்டு, சேலத்துக்காரரை குடைந்து வருகிறாராம். இதனால் 2 மாஜிக்களும் டென்ஷனில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘காலையில இரண்டரை மணிக்கு எழுந்து கோயிலுக்கு போனது எதற்காக… யாரு போனாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற, சேலத்துக்காரர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைப்பதில் கடும் காலதாமதம் ஏற்பட்டுக்கிட்டிருக்காம். இதனால நினைச்சத செய்ய முடியாம, மாங்கனி நகரிலேயே முடங்கிக்கிடக்காராம். குறிப்பாக, சேலத்துக்காரரு, ஒரு அடி எடுத்து வச்சா, ரெண்டு அடி இறங்கிட்டு இருக்காம். டெல்லி கோர்ட்டுல ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நினைப்புல இருந்தவருக்கு, வழக்கு அடுத்த மாதம் தள்ளிபோயிட்டதால ரொம்பவே மனசு ஒடிஞ்சி போயிருக்காராம். இந்த வருஷம் நல்ல வருஷமாக அமையும் வகையில் தீர்ப்பு இருக்கும்னு நினைச்சாராம். வழக்கு தள்ளிப்போனதால, கண் முன்னே பொதுச் செயலாளர் பதவி வந்து வந்து போகுதாம். இதனால நைட்ல சரியா தூக்கம் கூட இல்லை என்று அவரது அடிபொடிகள் பேசிக்கிறாங்க. இதற்கிடையில் யாரோ ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டாங்களாம். அதனால, ஊரே உறங்கிக்கிட்டு இருந்த நேரமான அதிகாலை இரண்டரை மணிக்கு எழுந்து, அந்தியூரில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்கு போயிருக்காரு. அங்கு மனமுருகி வேண்டிக்கிட்டு மாங்கனி நகருக்கு திரும்பியதாக சேலம்காரரின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொய் கணக்கு காட்டி கல்லா கட்டும் எழுத்து மருத்துவருக்கு என்ன தைரியம் இருக்கும்…’’ என்று ஆவேசத்துடன் ேகட்டார் பீட்டர் மாமா.‘குயின் பேட்டை மாவட்டத்துல நெமிலி பக்கத்துல, பு என்று தொடங்குற 3 எழுத்து பெயர் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் இருக்குது. இங்க தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிங்க சிகிச்சைக்காக வந்து போறாங்களாம். வாரத்துல செவ்வாய்க்கிழமை, கர்ப்பிணிங்க 200 பேர் வரைக்கும் செக்கப்புக்காக வர்றாங்களாம். இந்த சுகாதார நிலையத்துல 7 டாக்டர்ஸ் ஒர்க்ல இருந்தாங்களாம். ஆனா, இப்ப டாக்டர்ஸ் பற்றாக்குறையாக இருக்குதாம். டாக்டர்ஸ் இல்லாததால, 2 எழுத்து பெயர் கொண்டவரே புறநோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் பாக்குறாராம். அதோட, கர்ப்பிணிகளுக்கு செக்கப் செய்ய, மதியம் வரைக்கும் ஆச்சுன்னா, அவங்களுக்கு மதிய உணவு வழங்கணும். ஆனா எல்லாருக்கும் வழங்காம, ஒரு 10 பேருக்கு மட்டும் உணவு கொடுத்துட்டு 70ல இருந்து 100 பேர் வரைக்கும் உணவு கொடுத்தோம்னு, பொய் கணக்கு காட்றாங்களாம். அதேபோல, வாரந்தோறும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊட்டச்சத்து உணவுகளை வழங்கணுமாம். அதையும் கொடுக்குறதில்லையாம். ஸ்பான்சர் வாங்கி முகாம் நடத்தினாலும், அதையும் கணக்குல எழுதி பணத்தை சுருட்டும் வேலை தரமா நடக்குதாம். இப்படி பொய் கணக்கு காட்டி கல்லா கட்டி வர்றாராம் அந்த மருத்துவர்… இவர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு அந்த கிராமத்துல இருந்து குரல்கள் பலமாக ஒலிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஷாக் அடிக்கும் ஆபிஸ் சீட்டாட்ட கிளப்பாக மாறி இருப்பதை சொல்லுங்க…’’ என்று  கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில், சங்கத்தமிழ் புலவர் பெயர் கொண்ட அதிகாரி ஒருவர் இருக்கிறாராம். இவர், கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது நியமிக்கப்பட்டவர். இவரைப்போலவே, பல உதவி அதிகாரிகளும் அப்போதைய இலைக்கட்சி ஆட்சியின்போது பதவிக்கு வந்தவர்கள். இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து, அலுவலகத்தில் அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லையாம். இந்த ஆபீசை, கிட்டத்தட்ட சீட்டாட்ட கிளப்புபோல் மாற்றி விட்டார்களாம்.கட்டிட விதி மீறல்களுடன் யாரேனும் புதிதாக மின் இணைப்பு பெற வருகிறார்களா. அவர்களை எப்படி அமுக்கலாம் என வியூகம் வகுத்து செயல்படுகிறார்களாம். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை துணை மின் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு அதிகாரியும் இவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, அங்கு செல்லாமல் இங்கேயே முகாம் போட்டு விட்டாராம். ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே அறையில் கும்மாளம் போடுறாங்களாம்… இவர்கள் சிரித்து கூத்தடிக்க பைலில் கையெழுத்து வாங்க வேண்டிய ஊழியர்கள், பெண்கள் ஊழியர்கள் தயங்கி நிற்பதை அவமானமா நினைக்கிறாங்க… இந்த அவமானத்தை துடைத்தெறிய இவங்களை மாற்ற வேண்டும் என்று மின்வாரிய அலுவலகத்தின் மற்ற ஊழியர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா….

The post இலை கட்சியின் மாஜி மந்திரிகள் இரண்டு பேர் டென்ஷனில் இருக்கும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : maji ,leaf party ,tenshan ,Peter ,Lakshi District Lighthouse ,Maji Ministers ,
× RELATED தொடர் தோல்விகளால் எடப்பாடி...