×

திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நகைளை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் தங்க நகைகளை கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற நகைகளில் கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, இப்பணிகளைக் மேற்கொள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜீ, ஆர்.மாலா, ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில் நகைகளை கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இப்பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை அந்தந்த கோயில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும், அந்தந்த கோயில்களில் சுவாமிகளுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள் திரும்பப் பெறபட்டு பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கோயில்களின் தேவை போக உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி அவற்றை பாதுகாப்பாக வங்கிகளில் முதலீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் உள்ள பயன்பாடற்ற தங்க நகைகளை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முதன்மை செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….

The post திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நகைளை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu ,Samayapuram ,Itankudi ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Karumariyamman Temple ,Itankudi Mariamman ,Temple ,Samayapuram Mariamman ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்