×

இந்தியாவில் ஒரே நாளில் 55 சதவீதம் அதிகரிப்பு: லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: சுனாமிதான் என்பது உறுதியாகிறது: 9 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகமாகி, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து  கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் 3வது அலை தொடங்கியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரியில் டெல்டா – ஒமிக்ரான் வைரஸ்களின் 3வது அலை உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்தனர். கடந்த சில நாட்களாக அது நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கைப்படி, ‘இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது நேற்று 55 சதவீதம் அதிகரித்தது. பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் பாதித்துள்ளனர்.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286 ஆக அதிகரித்துள்ளது. 200 நாட்களில் இது அதிகபட்சமாகும். 325 பேர்  இறந்துள்ளதை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 4,82,876 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரானுக்கு நேற்று புதிதாக 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளாவில் 234, கர்நாடகா 226, குஜராத் 204 மற்றும் தமிழ்நாட்டில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நாட்டில் ஒமிக்ரானின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2630 ஆக உயர்ந்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம், பஞ்சாப், ஒடிசா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், பீகார் ஆகிய 9 மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஒமிக்ரான் தீவிரமடைந்து வருவதால், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே உண்மையான பாதிப்பு எண்ணிக்கை தெரிய வரும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை கருவிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதை மாநிலங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. * மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில்  71 போலீஸ்காரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.* டெல்லியில் நேற்று மட்டும் 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளது. *தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஒமிக்ரானுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. * ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு தொற்று: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால், மருத்துவமனைகளில்  சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக டெல்லி, மேற்கு வங்கத்தில் தலா 300 டாக்டர்களுக்கும், மகாராஷ்டிராவில் 260, பீகாரில் 154, பஞ்சாப்பில் 80, உத்தர பிரதேசத்தில் 35 டாக்டர்களுக்கு இதுவரையில் தொற்று உறுதியாகி இருக்கிறது. இருப்பினும், மருத்துவ பணியாளர்களும், டாக்டர்களும் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பான நிலையில் இருப்பதால், இவர்கள் 3 அல்லது 5 நாட்களில் குணமாகி விடுகின்றனர்.*பறக்கிறது ‘ஆர்’ காரணி: கொரோனா வைரஸ் தொற்றும் வேகம் ‘ஆர்’ காரணி மூலமாக கணக்கிடப்படுகிறது. இதன்படி, 2வது அலையில் டெல்டா வைரஸ் உச்ச நிலையில் தாக்கியபோதும் கூட, இந்த ‘ஆர்’ காரணி ஒரு சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 3வது அலையின் தொடக்கத்திலேயே இந்த நோய் தொற்றின் வேகம் 2.69 சதவீதமாக பதிவாகி இருக்கிறது.*ஒரே விமானத்தில் வந்த 125 பேருக்கு பாசிட்டிவ்: இத்தாலியில் உள்ள மிலனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று தனியார் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளில் 125 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த விமானத்தில் 179 பயணிகள் பயணித்தனர். எனவே, மற்றவருக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. *மேற்கு வங்கத்தில் குழந்தைகள் பாதிப்பு: 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 6 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். *ஒன்றிய அமைச்சர்கள், முதல்வருக்கு தொற்று: ஒன்றிய இணையமைச்சர்கள் பாரதி பவார், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதேபோல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது….

The post இந்தியாவில் ஒரே நாளில் 55 சதவீதம் அதிகரிப்பு: லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: சுனாமிதான் என்பது உறுதியாகிறது: 9 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Tsunami ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...