×

நம்பிக்கையுடன் தும்பிக்கையானை வணங்குவோம்; அசுவமேத யாகம் செய்த புண்ணியம் தரும் கோயில்: அதிசயங்கள், அற்புதங்கள் நிறைந்த ஹரிகர விநாயகர்

நாகர்கோயில்: ஐம்பெரும் சக்திகளின் மொத்த உருவம் தான் விநாயக பெருமான். நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய இந்த பஞ்ச பூதங்கள் மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத மாபெரும் சக்திகள். அத்தகைய ஐம்பெரும் சக்திகளை உள்ளடக்கிய ஆனை முகத்தானை வழிபட்டால் வாழ்வில் எல்லாம் வளமும் வந்து சேரும். இந்த நாளில் கேசவன்புதூர் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஹரிகர விநாயகரை தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியம் ஆகும். நாஞ்சில் நாட்டின் பசுமையான சோலை நிறைந்த பகுதியில் காட்சி அளிக்கிறார் ஹரிகர விநாயகர்.‘‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை,இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’’…என்று ஒளவை தமிழ்க்கிழவி பாடிய முழு முதற்கடவுளான விநாயகர் அருளாட்சி செய்யும் இத் திருக்கோயில் பல நூற்றாண்டுகளை கடந்தது ஆகும். இத் திருக்கோயில் வளாகத்தினுள் நுழைந்ததும் நம் கண்ணில் விழுவது இரு விளக்குத் தூண்கள் தான். இரு தூண்களின் நடுவிலொரு பெரிய கனத்த பலகைக் கல். ஒரு முன்னூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன், இந்தத் திருக்கோயில், எவ்வளவு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது என்பதற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. இரு விளக்குத் தூண்களுக்கு நடுவில் இருக்கிற அந்த பலகைக் கல்லின் இருபுறமும் கல்வெட்டுகள் உள்ளன.ஒரு புறத்துக் கல்வெட்டு கி.பி. 1650 ஆம் ஆண்டிலும், மற்றொரு புறத்துக் கல்வெட்டு கி.பி. 1655 ஆம் ஆண்டிலும் வெட்டப்பட்டிருக்கிறது. விளக்குத் தூண்களையும், கல்வெட்டினையும், தாண்டினால் உ என்கிற எழுத்தின் தொடக்கத்தில் உள்ள சுழி போன்று சற்றே உள் வாங்கிய நிலையில் ஹரிகர விநாயகர் திருக்காட்சி தருகிறார். இக்கோயில் கருவறையின் மேல் விமானம் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் நான்கு திசைகளிலும், ஐந்துகரத்தான் திருக்காட்சி தருகிறார். திசையெங்கும் நான் தானே காவல் என்றபடி பூத கணங்களும் காட்சி அளிக்கின்றன.உ என்கிற எழுத்தின் நீட்டல் பகுதியில், சிவனார் லிங்க உருவில் எதிரே நந்தியுடன் திருக்கோலம் கொண்டிருக்கிறார். மூல முதல்வரான மகனும், உலகிற்கே தந்தையான சிவனும், கிழக்கு நோக்கி அருளாசி வழங்குகிறார்கள். சிவனுக்கு எதிரே, நந்தி பகவான் இருக்கிறார். தென்னாடுடைய சிவனை, எந்நாட்டவர்க்கும் இறைவனை, வெளியில் நின்று தான் தரிசிக்க வேண்டும். அப்படியானதொரு சிற்றிடத்திலேதான் திருச்சிற்றம்பலத்தான் குடி கொண்டிருக்கிறார். பொன்னார் மேனியனாம் சிவன் கொலுவிருக்கும், மண்டபத்தின் பக்கவாட்டில், சரக்கொன்றை மரம் பூத்து பூவாய்ச் சொரிந்து கொண்டிருக்கிறது. திருக்கோயிலை வலம் வருகையில், ஒரு புறம் மேடை போன்ற அமைப்பு காணப்படுகிறது. நாகர்களும், வஜ்ரதேவரும், அமர்வதற்காக அமைக்கப்பட்ட மேடை. இப்பொழுது காலியாகக் கிடக்கிறது. கோயிலின் இடது புறம் பார்க்க, வட திசையில் நீண்டு பரந்த திடல். திடலின் வடதிசை ஓரத்தில், பெரும் வாகை மரமொன்று கிளை பரப்பி நிற்க, அதனருகே விழுது விட்டு நிற்கிற ஆலமரத்தின் கிளையொன்றில் சர விளக்கொன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. சற்று தள்ளி வேப்ப மரம் உள்ளது. வேப்பமரத்தின் கிளையில் மணியொன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அருகிலொரு பீடத்தில் பத்ரகாளி உள்ளார். மேலும் பல பீடங்கள் உள்ளன. இசக்கி என்றும், மாடன் என்றும் வணங்கப்படுகின்ற தெய்வங்கள் உள்ளன. ஹரிகர விநாயகர் கோயிலில் உள்ள புதுவூர் மடத்தில் மாதந்தோறும் வருகின்ற துவாதசி நாளன்று பன்னிரெண்டு அடியவர்களுக்கு, பராங்கு சதாதர் என்னும் ஒரு அடியவர் நமக்காரம் செய்து பல வெஞ்சனங்களுடன் ஊட்டு எனும் உணவு படைத்து வந்திருக்கிறார். பன்னிரு அடியார்களுக்கு உணவிட்டு சிறப்பிக்கும் அளவிற்கு, தேவையான நிலங்கள் இருந்துள்ளன. இந்த உணவிடும் நிகழ்ச்சிக்குத் தடை ஏற்படுத்தியவர்கள் கங்கைக்கரையில் காராம் பசுவினைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்றும், அதே சமயத்தில், இந்த தன்ம தானங்கள் தடையின்றி நடந்து வர செய்பவர்களுக்கு, அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்றும், ஹரிஹர விநாயகர் கோயிலின் முன்னுள்ள இரண்டு கல்வெட்டுகள் சொல்கிறது. 16ம் நூற்றாண்டில் உள்ள கல்வெட்டுகள் இருக்கிறது என்றால் எவ்வளவு பழமையானது என்பதை உணருங்கள். இத்தகைய சிறப்பு மிக்க அரிகர விநாயகர் கோயிலைப் பார்க்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றியிருக்குமே ? கேசவன் புதூர் சென்றால் ஹரிகர விநாயகரை தரிசித்து வரலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஹரிகர விநாயகருக்கு விரைவில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம்  நடக்க வேண்டும்.ஐந்துகரத்தான் ஆசிஇக்கோயிலில் வலது கரம் அபயம் காட்ட, இடது கரத்தினில் மோதகம் தாங்கி, அந்த மோதகத்தினையும், ஐங்கரன் என்றழைக்கப்படுவதற்குக் காரணமான ஐந்தாவது கரமான தும்பிக்கையால் தொட்ட வண்ணம் ஹரிகர விநாயகர் அருளாசி வழங்குகிறார். நம்பிக்கையுடன் தும்பிக்கையானை வணங்கி விட்டு ஆலயத்தினை வலம் வரலாம்.கோயிலுக்கு செல்லும் வழிகேசவன்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, கீரிப்பாறை செல்லும் சாலையில், பேருந்து செல்லும் சாலையிலேயே, சிறிது தூரம் நடக்க வேண்டும். அப்போது போற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சென்றடையலாம். அதன் எதிரே செல்லும் சாலையில் பயணிக்க சிறிது தொலைவில் ஹரிகர விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.12 ஆண்டுக்கு முன் புதுப்பிப்புபழம் பெருமைகளைச் சுமந்தபடி நிற்கிற கோயில் தான் என்றாலும், கருவறை விமானத்தின் சிற்பங்கள், பன்னிரு ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்த கதையினை, அதன் வண்ணங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. உ என்கிற சுழியின் வடிவினைக் காட்ட விநாயகரும், உ என்கிற எழுத்தின் நீட்டலாக உள்ள வடிவினைக் காட்டும் வண்ணமாக, சிவனார், விநாயகரின் இடது கைப் பக்கம், முன்னுள்ள கோயிலில் நந்தியுடன் திருக்காட்சி தருகின்றார்….

The post நம்பிக்கையுடன் தும்பிக்கையானை வணங்குவோம்; அசுவமேத யாகம் செய்த புண்ணியம் தரும் கோயில்: அதிசயங்கள், அற்புதங்கள் நிறைந்த ஹரிகர விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Ashvamedha Yagya ,Harikara ,Lord ,Ganesha ,
× RELATED இறைவன் காட்டும் ரெட் அலர்ட்!