×

இறைவன் காட்டும் ரெட் அலர்ட்!

ஒரு முதலாளியிடம் கார் ஓட்டும் வேலை கேட்டு மூவர் வந்திருந்தனர். நல்ல ஓட்டுநரை தேர்ந்தெடுப்பதற்காக, முதலாளி, ஓட்டுநர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘ஒரு ஆபத்தான பள்ளம் இருக்கும் போது, அதன் அருகாமையில் எவ்வளவு தூரம் வரை ஓட்டிச் செல்வீர்கள்?’’ என்றார். முதல் ஓட்டுநர் சொன்னார்; ‘‘ஐயா நான் ஒரு அடி வரை தைரியமாக ஓட்டிச் செல்வேன்.’’ மற்றொரு ஓட்டுநர் சொன்னார்; ‘‘நான் ஒரு அங்குலம் இடைவெளி வரை ஓட்டுவேன்.’’ மூன்றாவது ஓட்டுனர் சொன்னார்; ‘‘நான் அந்த பக்கமே செல்லமாட்டேன்.’’ மூன்றாவது ஓட்டுனரே வேலைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். இறைமக்களே, நம்மை சிந்திக்க தூண்டும் இக்கதையின் பொருளை நம்மால் உணர முடிகிறதா? ஆபத்து என தெரிந்தும் சோதித்துப் பார்க்கக் கூடாது.

ஆபத்தை உணராமல் சிக்கிக் கொள்பவர்களைவிட, ஆபத்து என தெரிந்திருந்தும் தாமாக சென்று சிக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் உயர்ந்துள்ளது. காரணம் என்ன? ஆபத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லையா? அல்லது ஆபத்தின் விளைவுகள் தெரியவில்லையா? இறைவேதம் ‘‘விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து (விலகிக்) கொள்ளுகிறான்; பேதைகளோ (ஆபத்தை உணராதவர்கள்) நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்’’ (நீதி.27:12) என இறைவேதம் கூறுகிறது.

ஆபத்தை விளைவிக்கும் நபர்களை, இடங்களை, பொருட்களை மற்றும் அதன் சூழ்நிலைகளைவிட்டு விலகுங்கள். ஆபத்தை உணரத்தும் அறிகுறிகளுக்கு, மனிதர்களுக்கு, அறிவிப்புகளுக்கு மற்றும் அமைப்புகளுக்கு
மதிப்பளியுங்கள்.

ஒரு தவறை தேவன் உணர்த்தும் போது அதைவிட்டு விலகிவிடுவதே சாலச்சிறந்தது. அந்தத் தவறால் தனக்கு எந்தத் தீமையும் நேரவில்லை, அந்த ஆபத்து என்னை அணுகாது, எனது திறமைக்கு முன் இதுவெல்லாம் சாதாரணம் என வீண் பேச்சு பேசி ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதிருங்கள். தீமையைவிட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை’’ (நீதி.16:17,18) என்று இறைவேதம் எச்சரிக்கிறது. காலத்தை அறிந்த கடவுள் காட்டும் ரெட் அலர்ட் என்றும் ஆபத்தானதே.

– அருள்முனைவர்.பெவிஸ்டன்.

The post இறைவன் காட்டும் ரெட் அலர்ட்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்