×

சீரார் சிவகங்கை

நன்றி குங்குமம் ஆன்மிகம் விண்ணகத்திலிருந்து பகீரதனின் தவத்திற்காகக் கீழிறங்கிய கங்கை, சிவனாரின் சடையில் அநேக காலம் தங்கியிருந்த பின்புதான், பெருமானாரின் கருணையால் நிலவுலகிற்கு வந்து சேர்ந்தனள். அவ்வாறு சிவபெருமான் தன் சடைமுடியில் கங்கையைத் தாங்கிவிடவில்லை என்றால், இந்நிலவுலகமே அழிந்து பாழ்பட்டிருக்கும் என்பார் மணிவாசகர். திருவாசகத்தின் திருச்சாழலில்,மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்று ஒருத்திசலமுகத்தால் அவன் சடையில் பாயும் அது ஏன்? ஏடிசலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்தி லளேல் தரணி எல்லாம்பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோஎன்பது அவர்தம் வாக்கு. திருநாவுக்கரசு பெருமானார் திருச்சாய்க்காட்டில்,மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்டஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகிவையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்தையலைச் சடையி லேற்றார் சாய்க்காடு மேவி னாரே.எனப் பாடி பரமன் பகீரதனுக்காகக் கங்கைதனை சடையில் ஏற்று வையகம் நெளிய பாயவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அப்பர்பெருமானோ, திருச்சோற்றுத்துறையில்;ஆர்த்துவந்து இழிவது ஒத்த அலைபுனல் கங்கையை ஏற்றுத்தீர்த்தமாய்ப் போதவிட்டார் திருச்சோற்றுத்துறையனாரேஎன்று குறிப்பதாலும்தான் அநேக காலம் தன் சடை முடியில், தேக்கியிருந்த கங்கைநீரைப் பகீரதனின் வேண்டுகோளுக்காகத் தீர்த்தமாக நிலமிசை பாயவிட்டார் என்பதறிகிறோம். வானத்துக் கங்கை எனினும் சிவனார் தலைமுடியிலிருந்து தீர்த்தமாக போதவிட்ட காரணத்தால், அந்நீர் சிவகங்கை எனப் பெயரைப் பெற்றது. உலகத்திலுள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவகங்கைதாம். அதனால்தான் குறிப்பாகச் சிவாலயங்களின் தீர்த்தக் குளங்கள் அனைத்துமே சிவகங்கை தீர்த்தங்களாகப் போற்றப்பெறுகின்றன.திருக்கோயில்களில் மூலவராகத் திகழும் சிவலிங்கத் திருமேனிக்கு திருமஞ்சணம் (அபிடேகம்) செய்யப்பெறுகின்ற நீர் கங்கை நீராகவே கருதப்பெறுகின்றது. அத்திருமஞ்சண நீர் கருவறையிலிருந்து கோமுகம் என்னும் பிரனாளம் வழியாக வெளிவரும். கோமுகம் என்ற பெயரே இமயமலைத் தொடரின் சிவலிங்க மலையின் கோமுகம் எனும் குகைவாயிலைக் குறிப்பதாகும். அக்கோமுகக் குகையிலிருந்து அம்மலைமேல் வீழ்ந்த விண்ணகக் கங்கைநீர் வெளிப்போந்து பாகீரதியாக (கங்கையாக) ஓடுவதைப் போன்றே ஒவ்வொரு ஆலயத்திலும் கோமுகத்திலிருந்து வெளிவரும் சிவனாரின் அபிடேகநீரை சிவகங்கை என்றே தொன் நூல்கள் குறிக்கின்றன.அந்த அபிடேக நீரும், திருக்கோயில் வளாகத்திற்குள் பெய்யும் மழைநீரும் சேர்ந்து சேகரமாகும் திருக்கோயில் குளங்கள் அனைத்துமே “சிவகங்கை” என்றே அழைக்கப்பெறுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு தஞ்சை இராஜராஜேச்சரத்து வளாகத்தில் திகழும் சிவகங்கைக் குளமாகும்.பொதிகைமலைத் தொடரின் ஓர் அங்கமாக விளங்கும் திருக்குற்றாலமலையின் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு இல்லாத காலங்களில் அங்கு சென்று காண்போமாயின், அருவிநீர் கொட்டும் பாறைப் பகுதிகளில் பல சிவலிங்கத் திருமேனிகள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பெற்று காட்சியளிப்பதைக் காணலாம். ஓரிரு இடங்களில் சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் உமாதேவியின் உருவமோ அல்லது இடபத்தின் உருவமோ இணைந்து திகழ்வதைக் காணலாம். ஒரே ஒரு இடத்தில் இரண்டு லிங்கத் திருமேனிக்கு இடையே முருகப்பெருமான் பத்மாசனத்தில் அமர்ந்தவாறு பின்னிரு கரங்களில் சக்தியும், வஜ்ஜிரமும் தரித்தவராக இட முன்கரத்தில் மலர்களை ஏந்தி, வல முன்கரத்தில் அருகிலிருக்கும் லிங்கத் திருமேனிக்கு புஷ்பாஞ்சலி செய்பவராகக் காணப்பெறுகின்றார். இங்கு திகழும் கந்தனோ காங்கேயன் எனப்பெறும் கங்கையில் உதித்தவனாவான்.இவ்வாறு மலைப்பாறையில் செதுக்கப்பெற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனிகள் மீதும், உமை, இடபதேவர், கந்தன் ஆகியோர் மீதும் விழுந்து அத்திருமேனிகளை அபிடேகித்தவாறு கொட்டும் அருவிநீரை, நாம் சாதாரண அருவி நீராகக் கருதாமல் அது பவித்திரமான சிவகங்கை எனக் கருதி புனித நீராட வேண்டும் என்பதற்காகவே அப்பாறையில் அச்சிற்பங்களை நம் முன்னவர்கள் இடம்பெறச் செய்துள்ளனர். தமிழகத்தில் தென்பாண்டி நாட்டில், சிவகங்கையாக திருக்குற்றாலமலை அருவி விளங்குவதைப் போன்று ஒவ்வொரு அருவி நீரும் சிவகங்கையே என்பதை நம் புராணங்களும், தொன் நூல்களும் அங்கு திகழும் இறையுருவங்களும் காட்டி நிற்கின்றன.கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள சிர்சி (Sirsi) எனும் ஊரிலிருந்து 17கி.மீ. தொலைவில் திகழும் சஹஸ்ரலிங்கா எனும் இடம் அங்கு ஓடும் ஷல்மலா ஆற்றில் திகழ்கின்றது. தார்வாட் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் இந்த ஆற்றில் திகழும் நூற்றுக்கணக்கான பாறைகளில், சிவலிங்க உருவகங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. சகஸ்ர லிங்கம் (ஆயிரம் லிங்கங்கள்) எனும் இடத்தில் பல நூற்றுக்கணக்கான லிங்கத் திருமேனிகள் உள்ள பாறை களின் மேல் நீர் வழிந்து ஓடுவதால், அந்த ஆற்றின் நீர் பவித்திரமான சிவகங்கையாகக் கருதப்பெறுகின்றது.விஜயநகரப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது விஜயநகரமாகும். அதன் ஒருபகுதியாக விளங்கும் ஹம்பியில், ஓடும் துங்கபத்திரை ஆற்றில் திகழும் பாறை மேல் ஒரு சதுரப் பகுதிக்குள் நடுவில் ஒரு பெரிய லிங்கமும், சுற்றிலும் ஆயிரம் லிங்கங்களும் திகழுமாறு ஓர் அரிய படைப்பினை விஜயநகர அரசர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த லிங்கங்களின் மீது ஆற்றுநீர் பெருக்கெடுத்தோடும்போது அது பவித்திரமான சிவகங்கையாகத் திகழும்.கம்போடிய நாட்டில் சியாம்ரீப் எனும் ஆறு குலன் மலைமேல் உற்பத்தியாகி சிறிய அருவியாக லியம்ரீப் எனும் ஊர் வழி ஓடி டோன்லிசாப் எனும் நதியுடன் கலக்கிறது. குலன் மலைமேல் இவ்வாறு நீர் ஓடிவரும் பாதையில், சுமார் 150 மீட்டர் அளவுக்கு ஆற்றின் தரையில் ஆயிரக் கணக்கான சிவலிங்கங்களைச் செதுக்கியுள்ளனர். மேலும், ஆங்காங்கே அரவணையில் பள்ளிகொள்ளும் திருமால், தாமரை மீது அமர்ந்துள்ள பிரமன், இடபத்தின் மீது உமையுடன் அமர்ந்துள்ள சிவன் ஆகிய உருவங்கள் செதுக்கப்பெற்றுள்ளன. ஆற்றில் பெருகிவரும் நீர் அனைத்து லிங்கங்கள் மீது ஓடியவாறு அருவியை அடைகின்றது. இது கங்கைநீர் எனக் காட்ட ஓரிடத்தில் கங்கையின் வாகனமான முதலையின் சிற்பத்தினைச் செதுக்கியுள்ளனர். எனவே, இது சிவகங்கையாகப் பாவிக்கப்பெறுகின்றது.கெமர் அரச மரபில் வந்த இரண்டாம் உதயாதித்தவர்மன் என்பான் கி.பி.1059-ல் இந்த சிவலிங்கங்களுக்கு இடையில் நீரில் தங்கத்தால் செய்யப்பெற்ற ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான் என்பதைக் கெமர் கல்வெட்டுகள் கூறுகின்றன. கெமர் நாட்டின் இந்த சிவகங்கை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தோனேஷிய நாட்டின் ஒரு பெருந்தீவான ஜாவாவின் மத்திய பகுதி பண்டு குஞ்சர தேசம் என அழைக்கப்பெற்றது. அங்கு கிடைத்த ஒரு வடமொழிக் கல்வெட்டு, ஸ்ரீமத் குஞ்சரகுஞ்ச தேச நிகிதம் கங்காதி தீர்த்த வர்த்தம் என்று கூறுகிறது. மத்திய ஜாவாவில் ஓடும் டாக் மாஸ் (Tock Mas) ஆறு பண்டு கங்கைநதி என்ற பெயரால் அழைக்கப்பெற்றது என்பதனை இதனால் அறிகிறோம். கி.பி.8ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி முழுவதும் அகஸ்தியர் வழிபாடு மேலோங்கி இருந்ததற்கான பல கோயில்களும், சிற்பங்களும் இன்றும் காணப்படுகின்றன. பல்லவர் ஆட்சிக் காலந்தொட்டு கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தமையால், ஆறுகளைக் கங்கை எனக் குறிப்பிடும் வழக்கம் அந்நாடுகளில் மேலோங்கி இருந்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலைமீது வடபுறம் நாவற்சுனை என்ற நீண்டதோர் சுனையொன்று நாவல்மரத்தின் கீழ் உள்ளது. இச்சுனை மலைமீது பெய்யும் மழைநீரால் நிரம்பிக் காணப்பெறும்.அண்மையில் இச்சுனை நீர் முழுவதையும் வெளியேற்றியபோது, சுனையினுள் ஒரு குடைவரையும் அதனுள் சிவலிங்க உருவமும் இருப்பது காணப்பெற்றது. இங்கு நீரினுள்ளேயே ஒரு குடைவரைக் கோயிலை அமைத்து, அதில் லிங்கத் திருமேனியையும் இடம்பெறச் செய்து ஆண்டு முழுவதும் அந்நீரினுள்ளேயே அந்த லிங்கம் அமிழ்ந்து திகழுமாறும், அந்த சுனையின் நீரினைப் பவித்திரமான சிவகங்கையாகவும் பாவித்துப் போற்றும் நெறியினை இங்கு வகுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலை எனும் ஊரில், பல மலைகள் உள்ளன. இவ்வூரின் மேலமலை எனப்பெறும் மலையில், விஜயாலய சோழனால் எடுப்பிக்கப்பெற்ற விஜயாலயசோழீச்சரம் எனும் கற்கோயிலும், அதற்கு எதிராக இரண்டு குடபோகக் கோயில்களும் உள்ளன. இவற்றின் அருகே மலைச்சரிவில் தலையருவி சிங்கம் எனும் சுனை ஒன்றுள்ளது. அச்சுனையினுள் சித்தன்னவாசல் நாவற்சுனையில் இருப்பதுபோன்று ஒரு குடைவரையும் அதனுள் சிவலிங்கமும் நீரினுள் மூழ்கிய நிலையிலேயே உள்ளன. இச்சுனைநீரும் சிவகங்கையாகவே பாவிக்கப்பெறுகின்றது.புதுக்கோட்டை நகரத்தில், திருக்கோகர்ணம் குன்றத்தில் குடையப்பெற்ற குடைவரைக் கோயிலை மூலக்கோயிலாகக் கொண்ட கோகர்ணேஸ்வரர் பெருங்கோயில் திகழ்கின்றது. முற்காலப் பாண்டியர் கால இக்குடைவரையின் மூலஸ்தானத்து அர்த்த மண்டபத்தில் பேரழகு வாய்ந்த கங்காதரர் சிற்பமும், கணபதியார் சிற்பமும் எதிரெதிர் சுவர்களில் இடம்பெற்றுள்ளன. விண்ணகத்திலிருந்து கீழிறங்கும் கங்கை எனும் நதிப்பெண்ணை சிவபெருமான் தன் விரிசடையில் ஏந்தித் தாங்க முற்படும் கோலமே இங்கு சிற்பமாக விளங்குகின்றது. இந்தக் குடைவரைக்கு வெளியே ஒருபுறம் திகழும் படிக்கட்டுகள் வழி குன்றத்தின் மீதேறினால், அங்கு நீண்டதோர் இயற்கையான சுனை இருப்பதைக் காணலாம். அச்சுனைக்குப் பாதுகாப்பாகப் பக்கச் சுவர்களும், கீழிறங்கி திருமஞ்சன நீர் எடுக்க ஏதுவாகப் படிக்கட்டுக்களையும் அமைத்துள்ளனர். கீழே கங்காதரர் திகழ, மேலே அவர் முடிமேல் இறங்குவது போன்று சிவகங்கை எனும் இச்சுனை அமைந்துள்ளது. வான்மழையால் ஆண்டுதோறும் இச்சுனை விண்ணக கங்கையை தன்னுள் தேக்கி நிறுத்தி நிற்கின்றது.தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post சீரார் சிவகங்கை appeared first on Dinakaran.

Tags : Seerar Sivakanga ,Ganga ,Bakiratan ,Shivanar ,
× RELATED கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர்...