×

இயற்கை வடித்த லிங்கம்

இயற்கையையும் தெய்வமாக வழிபடுவது இந்து மதத்தின் சிறப்புகளில் ஒன்று. இயற்கை அம்சங்களான மலை, கல், நதி, மரம் போன்ற ஒவ்வொன்றிலும் இறைவனின் சக்தி உண்டு என்ற நம்பிக்கை இம்மண்ணில் ஆழமாக வேரூன்றியுள்ளது. திருக் கயிலாயம் மற்றும் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டு இயற்கை வடிவான சிவனை தரிசித்து வருவதை சிவபக்தர்கள் பெரும் பேறாக எண்ணுகின்றனர். இமயமலையில், 13500 அடி உயரத்தில், இயற்கையாக அமைந்த 100 அடி நீளம், 150 அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட அமர்நாத் குகையினுள்ளே ஆண்டு தோறும் ஜூன் மாதம் பிற்பகுதி முதல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதி வரையான சுமார் 48 நாட்கள் காலகட்டத்தில், அதிகபட்சம் 20 அடி உயரம் வரை இயற்கையாகவே உருவாகி பின்னர் கரைந்து விடும் பனிலிங்கம், இயற்கை வடிக்கும் ஒரு அதிசய சிற்பம்.அடர்ந்த பனிப்பிரதேசத்தில், இயற்கையாக உருவாகி பனி லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானை தரிசிப்பது பக்தர்களுக்கு பரவசம் உண்டாக்கும் ஒரு உன்னத ஆன்மிக அனுபவமாகக் கருதப்படுகிறது.

அமர்நாத் புனித யாத்திரை

இமயமலைப்பகுதியின் கடுமையான மலையேற்றங்கள், அடிக்கடி மாறும் வானிலை மாற்றம், மழை, திடீர் காட்டாற்று வெள்ளம், கடும் குளிர், உடல் உபாதைகள், உயரமான மலைப்பகுதியில் ஆக்சிஜனின் அளவு குறையும் அபாயம், தீவிரவாத தாக்குதல், பொருளாதாரச் சிக்கல், என்று பல பேரிடர்களையும் பொருட்படுத்தாமல் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காகவே பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் வருகின்றனர். மேற்கண்ட அனைத்து இன்னல்களையும் எதிர்கொண்டு அமர்நாத் புனித யாத்திரையை பத்திரமாக மேற்கொண்டு திரும்பி வர அவர்தம் குடும்பத்தினர், நண்பர்களின் பிரார்த்தனைகள், பெரியோர்களின் ஆசிகள் பெற்று பக்தர்கள் செல்கின்றனர். உடலும், மனமும் ஒருங்கே ஒத்துழைப்பது அவசியம். அது மட்டும் போதாது, நாம் யாத்திரை மேற்கொள்ளும் நாட்களில் கடும் பனி, மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகள் இன்றி இயற்கையின் ஒத்துழைப்பும் கைகூடி வரவேண்டும். என்னதான் திறம்பட திட்டமிட்டிருந்தாலும், நமது திட்டமிடல்களையும் மீறிய இயற்கை நிகழ்வுகளை, எல்லாம் வல்ல இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, நம்பிக்கையுடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மலை உயரத்தில் குகையினுள் இயற்கை லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானை `ஹரஹர மஹாதேவ்’ என்ற கோஷம் முழங்க தரிசிக்கும் போது கிட்டும் பரவச அனுபவம், பயணத்தில் எதிர்கொண்ட அனைத்து கடின இடர்களையும் மறக்கடித்துவிடுகிறது.

இறவாதன்மை கொண்ட புறாக்கள்

அமர்நாத் குகையினுள் அமர்ந்துதான் சிவபெருமான், பார்வதி தேவிக்கு இறப்பில்லாத நிலை மற்றும் இறந்தாலும் மீண்டும் பிறப்பெடுப்பது பற்றிய வாழ்வின் இரகசியங்களை கூறினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதை ஒரு ஜோடி புறாக்கள் கண்டு அந்த ரகசியத்தை அறிந்து கொண்டன. பனி சூழ்ந்த பதிமூன்றாயிர உயர மலைப்பகுதியில், வேறெந்த பறவையினங்களும் தென்படாத போது, குகையினுள் புறாக்கள் பறப்பதை கண்டதும் ஒரு அற்புத அனுபவமே!அமைவிடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தலைநகர் ஸ்ரீ நகரிலிருந்து 140 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அமர்நாத் மலைக்குகை. காஷ்மீர் பள்ளத்தாக்கில், தேசிய நெடுஞ்சாலை எண்:1 வழியாக செல்லுகையில் சோன்மார்க்கிலிருந்து 22 கிமீ தொலைவு.

பால்தால் வழி

சோன்மார்க் வழியாக செல்லும் யாத்திரீகர்கள், 15 கிமீ தொலைவில் உள்ள அடிவார கிராமமான பால்தால் முகாமில் அமைக்கப்பட்டுள்ள டெண்ட்களில் தங்கி, அங்கிருந்து 14 கிமீ நடைப்பயணமாகவோ அல்லது குதிரை மூலமாகவோ கடுமையான மலையேற்றப்பாதை வழியாக அமர்நாத் குகைக்கு செல்லலாம். குதிரை மீது அமர்ந்து செல்பவர்கள், மலைப்பாதை ஏற்ற இறக்கங்களில் செல்கையில் சற்று கவனத்துடனே இருக்க வேண்டும்.

பகல்காம் வழி

அனந்தநாக் மாவட்டத்தின் பகல்காம் வழியாக சுமார் 40 கிமீ மலையேற்றப்பயணம், குதிரை மூலம் அமர்நாத் செல்ல இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.

பஞ்ச தரணி

பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இவைகளை இந்த இடத்தில்தான் சிவபெருமான் விட்டு சென்றதாகக்கூறப்படுகிறது. பஞ்ச தரணியில் ஐந்து நதிகள் சங்கமம் ஆகின்றன. அமர்நாத் குகை சென்றடைவதற்கு முன், இதுதான் கடைசி தங்குமிடம், முகாம் பகுதியாகும். பனி மலைகள் சூழ்ந்த, எழில் மிகுந்த இப்பகுதியில்தான் `ஹெலிபேட்’ அமைந்துள்ளது.பால்தால் என்னும் இடத்திலிருந்து அல்லது பகல்காமிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வருபவர்கள் இங்கே இறங்கி, மேலும் உள்ள 6 கிமீ மலைப்பகுதி தொலைவை மலையேற்ற நடைப்பயணம் அல்லது குதிரை அல்லது டோலி மூலமாகவோ கடந்து அமர்நாத் குகையை அடைய வேண்டும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, துணை ராணுவப்படைகள் மூலம் அமர்நாத் யாத்திரை பாதை மற்றும் சாலை முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

The post இயற்கை வடித்த லிங்கம் appeared first on Dinakaran.

Tags : Hinduism ,God ,Tiruk Kailayam ,Amarnath ,
× RELATED இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!