×

சீரான வாழ்வு தரும் சித்தாண்டீஸ்வரர்

ஏரிப்பாளையம் – திருப்பூர் மாவட்டம்உடுமலை நகரின் தெற்கில் உள்ள திருமூர்த்தி மலையில் பெய்யும் மழைநீர், மும்மூர்த்திகளின் பாதங்களை தொட்டு வணங்கி வடக்கு நோக்கி பாய்ந்து, ஏழு குளங்களின் வழியாக ராஜ வாய்க்கால் என்ற பிரதான வாய்க்காலில் ஓடி இத்தலத்தின் அருகில் உள்ள ஏரியை நிரப்பிவிட்டு வழிந்தோடி உப்பாறு என்ற பெயருடன் அமராவதி ஆற்றில் கலந்துவிடுமாம். நீர் நிரம்பிய ஏரியினைக் கொண்டு பாளையப்பட்டுக்கள் ஆட்சி செய்ததால் இப்பகுதி ஏரிப்பாளையம் என அழைக்கப்பட்டுள்ளது.இந்த ஏரிக்கரையின் மத்தியில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்பு லிங்க வடிவில் சிவபெருமான் தோன்றியுள்ளார். எப்போதும் சித்தர் பெருமக்கள், சிவபெருமானிடம் அண்டி பூஜித்து வந்ததால், சுயம்புவாய் தோன்றிய இத்தலம், இறைவனுக்கு சித்தாண்டீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. தெற்கு முகமாக சிவபெருமான் சுயம்புலிங்கத் திருமேனியராக எழுந்தருளியிருக்கின்றார். ஈஸ்வரன் தன்னிகரில்லாத தலைவன் என்ற நிலைக்கு, சித்தத்தை அடக்கி எண்ணங்களை விட்டு நீங்கி மனதை ஆண்டியாக “சும்மா இருந்து சுகம் காணும் நிலை” எனும் சித்தர் நிலையில் சிவமாகி சுகமாகி தோன்றிய திருமேனி உடையவன் சித்தாண்டீஸ்வரன் என்று இத்தலம் இறைவனின் மகிமையை கூறி சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் கருங்கற்களாலும், மண்டபத் தூண்கள் புடைப்புச் சிற்பங்கள் கொண்டதாகவும் இருக்கிறது. கோயிலில் உள்ள செப்பு பட்டயத்தின் மூலமாக நித்திய பூஜைகள் நடைபெறும் வகையில், எத்தலப்ப நாயக்கர் காலத்தில், கோயிலுக்கு தானமாக நிலங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மூலஸ்தானத்திலுள்ள சிவபெருமானின் நேர்பார்வை, சூலாயுதத்தில் அமைந்துள்ள அம்பாளின் திருமுகத்தைப் பார்ப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வமைப்புள்ள தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடுவதால், திருமணத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் தன்னை குளிர்விக்கச் செய்யும் அபிஷேகப் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் விதமாக உச்சி குளிர்ந்தபடி இத்தல அபிஷேக நந்தி காட்சி தருவது கூடுதல் சிறப்பு. மகா மண்டபத்தில் பலிபீடமும் அதனையடுத்து அதிகார நந்தியும் காட்சி தருகின்றன. அர்த்த மண்டபத்தையடுத்து கருவறையில் சுயம்புவாக தோன்றிய ஈசன், லிங்கத்திருமேனியராக சித்தாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை மூர்த்தியாகவும், சுயம்பு மூர்த்தியாகவும், வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியாகவும் வேண்டிடும் பக்தர்களுக்கு சீரான வாழ்வு தரும் இறைவனாக காட்சியளிக்கிறார்.இத்தலத்தின் கன்னிமூலையில் இடம்புரி விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு வலதுபுறம் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை கொண்ட நாகர் சிற்பமும், இடதுபுறம் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை கொண்ட நாகர் சிற்பத்தில் சிவலிங்கமும் உள்ளது. இடம்புரி விநாயகர் வலது கையில் எழுத்தாணியுடன் அருள்புரிகிறார். இத்தகைய மூர்த்தியை வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்குவர். இடம்புரி விநாயகர் சந்நதியையடுத்து தல விருட்சமான வில்வமரம் உள்ளது.சிவபெருமானின் கருவறைக்குப் பின்புறம் கிழக்குநோக்கிய நிலையில் ஏழு கன்னிமார்கள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலுக்கு வருகின்ற சுமங்கலிப் பெண்கள், அவரவருக்குரிய நட்சத்திர நாட்களிலும், செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் மஞ்சள் பொடியும், குங்குமப் பொடியும் இந்த தெய்வங்களின் மீது தூவி தீபமேற்றி, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, அபிராமி அந்தாதியைப் பாடி வழிபட்டு வந்தால், கணவன் மனைவி உறவு பலப்படும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் காவல் தெய்வமாக, ஈசான்ய மூலையில் நின்ற நிலையில் கருப்பண்ணசாமி காட்சியளிக்கிறார். பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, தமிழ் மாத பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இறைவன் சித்தாண்டீஸ்வரர் தெற்கு நோக்கி அருள்பாலிப்பதால் கருவறை மூர்த்தியே வியாழன் அன்று குரு பகவானாக (தட்சிணாமூர்த்தி) இத்தலத்தில் காட்சியளிக்கிறார். அன்றைய தினம் காலை முதல் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இப்பூஜையில் கலந்து கொண்டு வேண்டிடுவோருக்கு குரு பலம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் குரு பலம் குறைபாடுள்ள அன்பர்கள், வியாழன் அன்று இத்தலத்திற்கு வந்து சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு இறைவனை வேண்டி குருபலம் பெற்றிடுங்கள். ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில், அன்னாபிஷேக வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும், பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.தென்னாடுடைய சிவன் தெற்கு நோக்கி சுயம்புவாய் அருளும் இத்தலத்தை துதித்த சித்தர் பெருமக்கள், கயிலையில் தெற்கு நோக்கி அருளும் சிவபெருமானைப் போல் இத்தலத்திலும் அருள்பாலிப்பதால், “கயிலையில் காணும் அற்புதக்காட்சி உடுமலையில் காண்பது அந்த ஈசனின் திருவருள் மகிமையே” எனப் போற்றித் துதித்துள்ளனர். இத்திருத்தலம் செல்ல வழிதிருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து 2.கி.மீ தொலைவில் ஏரிப்பாளையம் உள்ளது. உடுமலைலிருந்து பேருந்து வசதி மற்றும் கால்டாக்ஸி, ஆட்டோ வசதி உள்ளது.தொகுப்பு – சென்னிவீரம்பாளையம் செ.சு.சரவணகுமார்

The post சீரான வாழ்வு தரும் சித்தாண்டீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Siddandieswara ,Eripalayam ,Tiruppur ,Thirumurthi ,Udumalai ,Thumurthi ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...