×

அரச மரத்தடியில் காட்சி தந்த ஆண்டிக்கேணி ஐயனார்

நன்றி குங்குமம் ஆன்மிகம் ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் உத்தரவுப்படி, மறவர் இனத்தைச்சேர்ந்த ஆண்டியார் என்பவர் சேதுக்கரையைக் காவல் காத்துவந்தார். ஐயனாரைக் குலதெய்வமாகக் கொண்ட அவருக்கு, திருத்தல யாத்திரை செய்ய விருப்பம் உண்டானது; புறப்பட்டார்.பல தலங்களையும் தரிசித்தபடி இலங்கை சென்ற அவர், அங்கிருக்கும் ஆலயங்களைத் தரிசித்தார். அப்போது, காரைத்தீவில் ஐயனாருக்கு ஒரு சிறப்பான ஆலயம் இருப்பதாகக் கேள்விப்பட்டார் ஆண்டியார்; ‘‘ஆகா! நம் குலதெய்வம் நமக்கு அருள் செய்வதற்காகவே இங்கே எழுந்தருளி இருக்கிறது’’ என்று மிகுந்த ஆர்வத்தோடு ஐயனாரைத் தரிசிக்கச் சென்றார் ஆண்டியார். ஆர்வமாகச்சென்ற ஆண்டியாருக்கு, அங்கே அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவர் பார்க்க விரும்பிய கோவில் போர்த்துக் கீசியர்களாலும் ஒல்லாந்தர்களாலும் சிதைக்கப்பட்டு சீரழிந்து இருந்தது. அவர்கள் ஆலயத்தில் இருந்த செல்வங்களைக் கொள்ளையடித்ததோடு, ஐயனாரை ஒரு கிணற்றில் போட்டு விட்டுப்போய் விட்டார்கள். விவரம் அறிந்த அடியார் ஒருவர், கிணற்றில் இருந்த ஐயனாரைத் தூக்கிக்கொண்டுபோய், திண்ணைக்களிமேடு எனும் பகுதியில் ஓர் அரசமரத்தின் அடியில் மறைத்து வைத்துவிட்டுப் போனார். இந்த விவரங்களை அறியாத ஆண்டியார் மனம் வருந்த, ஆலய அர்ச்சகரான கனகசபாபதி குருக்கள், அடியாரான ஆண்டியாரைத் தன் வீட்டில் தங்கவைத்து உபசரித்தார். அவர் அன்பைக் கண்டு மெய்மறந்த ஆண்டியார், ஐயனார் ஆலயத்தைப்பற்றிய தகவல்களை அவரிடமிருந்து அறிந்துகொண்டார். ஐயனார் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, 1518-ம் ஆண்டு-பிலவ வருடம்-வைகாசி 25-ம் நாளன்று கும்பாபிஷேகம் நடந்த தகவலும், பகைவர்களால் ஆலயம் சிதறிப்போனதும் தெரிந்தது. ‘‘காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, என் குலதெய்வத்தைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு இல்லையே!’’ என்று வருந்திய ஆண்டியார், பெரும்பாலான நேரத்தை ஐயனார் தியானத்திலேயே கழித்தார். அடியார் மனம் சலிக்க ஐயனார் விடுவாரா?ஒருநாள்…ஆண்டியாரின் கனவில் காட்சி கொடுத்த ஐயனார், ‘‘அன்பனே! யாம் இந்த ஊருக்கு வடக்கே உள்ள திண்ணைக்களிமேட்டிற்கு அருகே அரசமரத்தின் அடியில் இருக்கிறோம். வா!’’ என்று கூறி மறைந்தார். கனவு கலைந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை ஆண்டியாருக்கு. தன்னைப் பாதுகாத்து வந்த குருக்களுக்குத் தன் கனவைச் சொல்லி மகிழ்ந்து, அவரின் அனுமதியோடு நீராடி செய்யவேண்டிய வழிபாடுகளை முறையாகச்செய்து, தன் கையில் ஒரு சூலா யுதத்தோடு, ஐயனார் குறிப்பிட்ட அரச மரத்தைத் தேடிப் புறப்பட்டார்.அங்கு போய்ப் பார்த்தால்…ஐயனார் குறிப்பிட்ட அரச மரத்தைச் சுற்றி, முட்களும் புற்றுகளுமாகப் பெருமளவில் பரவிக் கிடந்தன.ஆண்டியார் சலிக்கவில்லை; ‘‘ஐயனார் வழிகாட்டி இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்’’ என்று பொறுமையாக, முட்புதர்களையும் புற்றுகளையும் நீக்கி, அந்த இடத்தைத் தூய்மை செய் தார்; அதன்பின் அங்கே அரச மரத்தின் அடியில் தன் கையில் இருந்த சூலாயுதத்தை நட்டு, வழிபாடு செய்யத் தொடங்கினார்.புதர் மண்டிக்கிடந்த இடத்தில் பூஜைகள் நடப்பதைப் பார்த்த மக்கள் வியந்து, அவர்களும் பூஜையில் பங்கேற்றார்கள். ஒரு சிலர் போய், நில உரிமையாளரிடம் தகவல் சொன்னார்கள். அந்த நில உரிமையாளர் பெயர்-அம்பலவி முருகனார். நற்குணங்களும் பக்தியும் நிறைந்த உரிமையாளர், உடனே புறப்பட்டு வந்தார்.வந்தவர், ஆண்டியாரின் அமைதியான தோற்றத்தையும் அமைதியான அவரது வழிபாடுகளையும் கண்டு மெய் மறந்தார். அதைக் கண்ட ஆண்டியார், விபூதிப் பிரசாதத்தை அளித்தார். அதைப் பணிவோடு நில உரிமையாளர் பெற்றுக் கொண்டதும், ஆண்டியார் தன்னைப் பற்றியும் தன் கனவைப் பற்றியும் நிலஉரிமையாளரிடம் விவரித்தார். நில உரிமையாளர் மகிழ்ந்து, வழிபாட்டிற்காக ஒரு சிறு கொட்டகை அமைத்துக் கொடுத்து உதவினார். ஆண்டியார் நாள்தோறும் வழிபாடு முடித்து, ஐயனாரைத் தேடுவதிலேயே காலத்தைச் செலவிட்டார். ஊஹும்! ஐயனார் அகப்படவே இல்லை.மனம் வருந்திய ஆண்டியார், ‘‘ஐயனார் அப்பனே! உன் திருவடிகளை வணங்குவது என்பது, உன் அருள் இல்லாமல் கைகூடுமா ஐயா?’’ என்று வருந்திப் புலம்பினார் .ஒருநாள்…ஆண்டியார் அங்கே அமர்ந்திருந்தபோது, காந்தமலை ஜோதியான ஐயனார், அரசமரத்தின் தென்கிழக்குப் பக்கத்தில் ஒரு பேரொளியைக் காட்டினார். வியந்த ஆண்டியார் எழுந்துபோய் நெருங்க, ஜோதி மெள்…ள மறைந்தது. ‘‘ஆகா! ஐயனார் இங்கேதான் இருக்க வேண்டும்!’’ என்று ஆத்மார்த்தமாக வாய்விட்டுச் சொன்ன ஆண்டியார்,ஜோதி தோன்றிய இடத்தைத் தோண்டிப் பார்த்தார். பழைமையான அழகான ஐயனார் அகப்பட்டார்.நிலைகொள்ளவில்லை ஆண்டியாருக்கு; ஐயனாரை அப்படியே நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக்கொண்டார். அவர் கண்களிலிருந்து வழிந்த ஆனந்தக்கண்ணீர், ஐயனாரை ஆனந்த நீராட்டியது. ஐயனாரைக் கீழே வைத்த ஆண்டியார், தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.வழிபாடும் அபிஷேகங்களும் தொடங்கின. (இந்த இடத்தில் ‘ஈழத்து சிதம்பர புராண’த்தில் அற்புதமான ஐயனார் துதி அமைந்துள்ளது).ஐயனாரின் திருவடிவைத் தோண்டி எடுத்த இடத்தில், ஒரு கிணறு தோண்டி; ஆலய வழிபாட்டிற்காக ஒரு நந்தவனத்தையும் உண்டாக்கினார்கள். ஐயனார்-வைரவர் பூஜைகளோடு ஆண்டியார் அங்கேயே அரசமரத்தின் கீழே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். அவ்வப்போது அம்பலவி முருகரும் வந்து, ஆண்டியாருக்கு வேண்டிய உதவிகளைச்செய்து உறுதுணையாக இருந்தார்.அவரிடம் ஆண்டியார், ‘‘இங்கே ஐயனாருக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும்’’ என்னும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அம்பலவி முருகரும், ‘‘அப்படியே செய்கிறேன்’’ என்றார். அதைக் கேட்ட ஆண்டியாரும் அப்போதே தன் பொறுப்புக்கள் எல்லாம் நீங்கியவரைப்போல, சில நாட்களுக்குப்பின் ஐயனாரின் திருவடிகளை அடைந்தார். இலங்கையில் காரைநகர் எனும் பகுதியில் எழுந்தருளி இருக்கும், மிகவும் புகழ்பெற்ற ‘ஆண்டிக்கேணி ஐயனார்’ வரலாறு இது.தை முதல்நாளில் ஜோதி வடிவாகக் காட்சியளிக்கும் தெய்வம், காரைநகர்ப் பகுதியில் ஒரு அரசமரத்தின் அடியில் ‘ஜோதி’ வடிவாகக் காட்சி தந்து வெளிப்பட்ட அற்புதமான வரலாறு.தொகுப்பு: சந்திரமௌலி

The post அரச மரத்தடியில் காட்சி தந்த ஆண்டிக்கேணி ஐயனார் appeared first on Dinakaran.

Tags : Antikheni Iyanar ,Anmikam Ramanathapuram ,King ,Sethupathi ,Andiyar ,Setukkarai ,Antikeni Aiyanar ,Dinakaran ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்