×

சொத்து பிரச்னையைத் தீர்த்தருளும் ஏகிரி அம்மன்

திருச்சிமிகவும் புராதானமான கன்னிமார் ஆலயங்கள் நம்நாட்டு கிராமப்புறங்களில் நிறையவே உள்ளன. அதவத்தூரில் உள்ள கன்னிமார் ஆலயம் மிகவும் தொன்மையானதாகத் தோன்றினாலும், எத்தனை ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.  சிறிய மகாமண்டபம். அடுத்து அர்த்த மண்டபம். அடுத்துள்ள கருவறையில் கன்னிமார் ஏழுபேரும் வரிசையாக அமர்ந்து அருட்பாலிக்கின்றனர். கன்னிமாருக்கு என பீடம் உள்ளது. கருவறையில் கன்னிமார்கள் அருட்பாலித்தாலும் ஆலயத்தை ஏகிரி அம்மன் ஆலயம் என்றுதான் அழைக்கிறார்கள்.   வெளியே பிராகாரத்தில் சாம்புகன், தேரடி கருப்பு மதுரை வீரன் ஆகிய காவல் தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி தொடங்கும் திருவிழா, இருபத்தியிரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. வெகு விமரிசையாக  நடைபெறும் இந்தத் திருவிழாவில் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். கன்னியரும் சிறுமியரும் புத்தாடை அணிந்து கூட்டம் கூட்டமாக திருவிழா காணவரும் காட்சியில் அழகு ததும்பும். இருபத்தியிரண்டாம் நாளன்று நடைபெறும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். பொதுவாக கோயிலில் தினசரி ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. தாரதோஷம் புத்ரதோஷம் உள்ளவர்கள், இந்தக் கன்னிமார்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரார்த்தனை செய்தால் உரிய பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். அடிக்கடி விபத்தில் சிக்கும் ஆண்களும், பெண்களும் மூலவருக்கு அஷ்டமியில் விளக்குத் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள, அவர்களது வேண்டுதல் பலிக்கின்றனவாம்.அடுத்து எந்த விபத்திலும் சிக்காமல், உடல் பங்கமின்றி அவர்கள் நலமாக வாழ்கிறார்களாம். சொத்து பிரச்னை மற்றும் தம்பதிக்கிடையேயான பிரச்னைக்கு இருபத்தோரு நாட்கள் தீபமேற்றி வழிபட அந்தப் பிரச்னைகள் எல்லாம் தீயிலிட்ட மெழுகுபோல உருகி, காணாமல் போய்விடுமாம். திருச்சியிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள அதவத்தூரில் உள்ளது இந்த ஏகிரி ஆலயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பொது மருத்துவமனையிலிருந்து நிறைய பேருந்துகளும் மினி பேருந்துகளும் உள்ளன. ஆட்டோ வசதியும் உண்டு. காலை 8 முதல் இரவு 8 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.- ஜெயவண்ணன்…

The post சொத்து பிரச்னையைத் தீர்த்தருளும் ஏகிரி அம்மன் appeared first on Dinakaran.

Tags : Aegiri ,Amman ,Kannimar ,Kannimar temple ,Athavathur ,Ekri Amman ,
× RELATED மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில்...