×

சிற்பமும் சிறப்பும்-பாழடைந்த நிலையிலும் பரவசமூட்டும் பானம்பாக்கம் சிவன் கோயில்

காலம்: விக்கிரம சோழன் (பொ.யு.1122-1135), குலோத்துங்க சோழன்-III (பொ.யு.1178-1218), ராஜராஜ சோழன்-III (பொ.யு.1216-1256) ஆகியோரின் பல்வேறு திருப்பணிகள் குறித்த கல்வெட்டுகள் உள்ளன.ஆலயம்: பானம்பாக்கம் சிவன் கோயில், திருவள்ளூர் மாவட்டம்.இறைவன்: ஜனமேஜயஈஸ்வரர்.தொண்டை மண்டலம் (தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கிய பகுதி) பழம்பெரும் ஆலயங்களில் புகழ் பெற்றது. சில ஆலயங்கள் நல்ல பராமரிப்புடனும், பக்தர் கூட்டத்துடனும் இருந்தாலும், சிற்றூர்களில் இருக்கும் பல ஆலயங்கள் கவனிப்பின்றி, புதர் மண்டி சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி பானம்பாக்கம் சிவன் கோயில்.விக்கிரம சோழன் (பொ.யு.1122-1135), குலோத்துங்கச் சோழன்-III (பொ.யு.1178-1218), ராஜராஜ சோழன்-III (பொ.யு.1216-1256) ஆகியோரின் பல்வேறு திருப்பணிகள் குறித்த கல்வெட்டுகளும், கோஷ்டத்தில் பேரழகு சிற்பங்களும், தோரணங்களும் நிறைந்துள்ள இவ்வாலயத்தின் இன்றைய நிலை காணுகையில் மனம்வெதும்பு கிறது.சுற்றுச் சுவர் ஏதுமின்றி, ஆலயம் எவ்வித பாதுகாப்புமின்றியே உள்ளது. வெளிப்புற கோஷ்டங்களில் செம்மையாக செதுக்கப்பட்ட விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. அஷ்ட மங்கல சின்னங்களுடன் கூடிய வாசலில் நுழைந்து, மாலை தொங்கல், அழகிய ஆடல் என நுண்சிற்பங்கள் கூடிய தூண்கள் தாங்கி நிற்கும் முன் மண்டபத்தினுள் சற்று அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. சோழர் காலத்தில் `ஜனமேஜய ஈஸ்வரர்’ என்று போற்றப்பட்ட இறைவன் 16 பட்டைகளுடன் லிங்க வடிவில் அருள்புரிகின்றார்.மரவேர்களும், கிளைகளும் உட்புகுந்ததால் கருவறை சிதிலமடைந்தும், தூண்கள், உத்திரங்கள் சரிவடைந்து எப்போது சாய்ந்துவிடுமோ என்கிற நிலையில் உள்ளன. சமீபத்தில், தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கம் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்புடன் ஆலயத்தின் வெளிப்புறப் பகுதிகளில் இருந்த புதர்ச் செடிகள் அகற்றப்பட்டு வளாகம், சிற்பங்கள் சுத்தம் செய்யப்பட்டது. இருந்தாலும், ஆலயச் சுவர்களினூடே செல்லும் பெருமரம் மற்றும் அதன் வேர்களை அகற்றி கற்சுவர்களை சீரமைப்பது பெரும் சவாலான காரியமாகும். மரம் மேலும் வளர்ந்து, கோயில் அதிகம் சிதிலமடைவதற்குள் சம்பந்தப்பட்ட துறையினர் கூடிய விரைவில் பராமரிப்பு செய்து புனரமைப்பது, இந்த அரிய ஆனால் அதிகம் அறியப்படாத சோழர்களின் பொக்கிஷமான இவ்வாலயத்தைக் காப்பாற்றும்….

The post சிற்பமும் சிறப்பும்-பாழடைந்த நிலையிலும் பரவசமூட்டும் பானம்பாக்கம் சிவன் கோயில் appeared first on Dinakaran.

Tags : Panambakkam Shiva Temple ,Wickrama Choshan ,Kulothunga Chosan-III ,Rajaraja Cholan- ,Panambakakkam Shiva ,Temple ,
× RELATED சிற்பமும் சிறப்பும்-பாழடைந்த...