×

பிறைசூடிய பித்தனை குறைகூறி ஈர்த்த சித்தர்

மானூர் – நெல்லைநெல்லை மாவட்டம் மானூரில் உள்ள அம்பலவாணசுவாமி கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. திருவளரும் கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். அவர் கலைகள் முழுவதும் நன்றாக கற்று தம்மையறிந்து தலைவனைத் தம்முள்ளே கண்ட பெருமையுடையவர். மெஞ்ஞானியான அவர் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று நல்வரங்கள் கேட்டுப் பெற்று திருநெல்வேலியை அடைந்தார். நெல்லையப்பரை தரிசிக்க வந்த நேரத்தில் நெல்லையப்பரிடம் இருந்து மறு மொழி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த கருவூர் சித்தர், “ஈசன் இங்கு இல்லை, அதனால் இங்கே எருக்கு எழ” என சாபமிட்டு மானூர் சென்றடைந்தார். இதையடுத்து நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் ஏறி, ஆவணி மூல நாளில் அதிகாலையில் மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்து, திருநெல்வேலி திரும்பினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சித்தர், நெல்லை நாயகர் மானூருக்கு நன்னும் பொருட்டு அடிக்கு ஓராயிரம் பொன் ஈந்து, சித்தரும் நெல்லையை அடைந்து, ‘‘ஈசன் இங்கே உண்டு, அதனால் எருக்கு அற்றுப்போக’’ என மொழிந்தார். அதன்படி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருநாளில் நெல்லையப்பர் பரிவார மூர்த்திகளுடன் மானூருக்கு எழுந்தருளி கருவூர் சித்தருக்கு காட்சியளிக்கும் விழா நடைபெறுகிறது. ஒரு காலத்தில் நெல்லையப்பரின் நடன சபையாக மட்டுமே இருந்த இந்தக் கோயில் பின்னர் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதியம்மன் போன்ற தெய்வ சந்நதிகள் ஏற்படுத்தப்பட்டன. சோழர் கால குடவோலை முறையை குறிப்பிடும் உத்திரமேரூர் கல்வெட்டைவிட காலத்தால் முந்தைய மானூர் கல்வெட்டுகள் இக்கோயிலின் அம்பலவாண மண்டப தூண்களில் உள்ளன. சுமார் கிபி 800ல் அமைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு மானூர் ஊர் மகாசபையின் உறுப்பினர் ஆவதற்குரிய தகுதியை தெளிவாக கூறுகிறது. இதில் அந்த கால நகர ஆளுகை முதலிய விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மானூர் அம்பலத்தின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கண்டதார்? என்ற ஒரு வாசகம் உள்ளது. வடகிழக்கு மூலையில் இருந்த ஆமையும், அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடுபேறு பெற்றதாக தகவல்கள் உள்ளன. ஆமையும், அன்னமும் கல்லில் சித்திரமாக வடிக்கப்பட்டுள்ளன. விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், கருவூர் சித்தர், முருகன், திருவடிபோத்தி ஆகிய சந்நதிகள் உள்ளன. 7 அடி உயர கல்தூண் கோயில் முன்பகுதியில் உள்ளது. இத்தூண் திருவடி போத்தி என வழிபடப்படுகிறது. முன்னர் பாண்டியன் ஒருவரால் மெக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட முகம்மதுவின் சக்தி அந்த தூணில் பதியப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கல்வெட்டு மேல்பகுதியில் கலப்பெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நெல்லை சங்கரன்கோவில் சாலையில் நெல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானூரில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பஸ்களில் செல்லலாம்.தொகுப்பு: ச.சுடலைகுமார்

The post பிறைசூடிய பித்தனை குறைகூறி ஈர்த்த சித்தர் appeared first on Dinakaran.

Tags : Irtha Siddha ,Manoor ,Nellainellai District ,Ambalavanaswamy Temple ,Keeranur ,Irtha Siddhar ,
× RELATED திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது