×

சயனக் கோலம் கொண்டருளும் அரங்கனின் ஆலயங்கள்

வைகுண்ட ஏகாதசி*வைகுண்ட ஏகாதசி என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரங்கம்தான். அதனாலேயே பூலோக வைகுண்டம் என்று அழைக்கின்றோம். எல்லா திவ்யதேச பெருமாள்களும் இரவில் இங்கு வந்து விடுவதாக ஐதீகம். ரங்கனின் அதிகாலை விஸ்வரூபத்தை தரிசித்தால் 108 திவ்ய தேசப் பெருமாள்களையும் தரிசித்ததற்கு ஒப்பாகும்.இங்கு எல்லாமே பெரியவை. பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். நிவேதனப் பொருட்களை பெரிய அவசரம் என்பர். வில்லிபுத்தூர் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் அழகான மாப்பிள்ளை கோலத்தில் ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளன் ஆனார். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் 247 பாக்களால் மங்களாசாஸனம் பொழியப்பட்ட திவ்யதேசம் இது. திருமங்கையாழ்வார் திருநறையூர் பெருமாள் மீது திருமடல் பாடினார். ரங்கத்தில் திருமதில் எழுப்பினார். அரங்கன் ‘எமக்கு மடல் இல்லையோ?’ என்றபோது, ‘மதில் இங்கே, மடல் அங்கே’ என்றாராம் ஆழ்வார். * கிருபாசமுத்திரப் பெருமாள் எனும் பெயரில் பாலசயனத்தில் ஆதிசேஷன் மேல் வீற்றருளும் பெருமாள் மயிலாடுதுறை அருகே சிறுபுலியூரில் அருள்கிறார்.* மயிலாடுதுறை, திருஇந்தளூரில் சந்திரனின் சாபம் தீர்த்த பெருமாளை பரிமள ரங்கநாதனாக தரிசிக்கலாம்.* கோயமுத்தூர், காரமடையில் ரங்கநாதர் ஆலயத்தில் சடாரிக்குப் பதில் ராமபாணத்தை பக்தர்கள் தலையில் வைத்து  ஆசீர்வதிக்கிறார்கள்.* வேலூர் – பள்ளிகொண்டானில், பள்ளி கொண்டபெருமாளை தரிசிக்கலாம்.  இங்குள்ள சிறிய ரங்கநாதர் சிலை சோட்டா ரங்கநாதர் என அழைக்கப்படுகிறது.* புதுக்கோட்டை, மலையடிப்பட்டியில் குடைவரைக் கோயிலில் ரங்கநாதரை தரிசிக்கலாம்.* வேலூர், திருப்பாற்கடல் தலத்தில் கடல் மகள் நாச்சியாரோடு அத்தி மரத்தாலான ரங்கநாதப் பெருமாள் திருவருள் புரிகிறார்.* விழுப்புரம் – ஆதிதிருவரங்கத்தில் ரங்கம் பெருமாளை விட பெரிய திருவடிவில்ரங்கநாதர் அருள்கிறார்.* விழுப்புரம் – சிங்கவரத்தில் ரங்கநாயகித்தாயாரோடு ரங்கநாதர் தரிசனம் தருகிறார். இவரது பாத தரிசனம் வறுமையை நீக்கி செல்வத்தைத் தரும்.*  தேவி – பூதேவியோடு, கஸ்தூரிரங்கனை ஈரோட்டில் தரிசிக்கலாம். சாந்த துர்வாச முனிவர் இத்தலத்தில் அருள்வதால் இத்தல தரிசனம் கோப குணத்தைக் குறைக்கும்.* மாமல்லபுரத்தில் மூலவர் ஸ்தல சயனப் பெருமாளாகவும் உற்சவர் உலகுய்ய நின்றானாகவும் அருள்கிறார்கள். பூதத்தாழ்வார் அவதாரத் தலம் இது.* புதுக்கோட்டை – திருமெய்யத்தில் சத்யமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூல மூர்த்திகளை தரிசிக்கலாம். இத்தலம் மனநோய்களை விரட்டுகிறது.* கர்நாடகம், மாண்டியா மாவட்டம், ரங்கப்பட்டினத்தில் ரங்கநாதர் அருளாட்சி புரிகிறார். இது ஆதிரங்கம் என போற்றப்படுகிறது. இங்கு மகரசங்கராந்தியன்றே (பொங்கல்) சொர்க்கவாசல் திறக்கப்படுவது தனிச் சிறப்பு.* தஞ்சாவூர், திருப்புள்ளம்பூதங்குடியில் வல்வில்ராமன் தரிசனம் தருகிறார். ரங்கநாதரைப் போன்ற சயனத் திருக்கோலம். இது புதன் தோஷ பரிகாரத்தலம். பதவி உயர்வு வேண்டுவோர் இத்தல யோக நரசிம்மருக்கும் உத்யோக நரசிம்மருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள்.*திருவள்ளூரில் எவ்வுள்கிடந்தான் எனும் பெயரில், வீரராகவப் பெருமாளை தரிசிக்கலாம். 3 அமாவாசைகள் தொடர்ந்து இவரை வழிபட தீராத நோய்களும் தீர்ந்து விடுகின்றன.* தூத்துக்குடி, திருக்கோளூரில் வைத்தமா நிதிப்பெருமாள் அருள்கிறார். நவகிரக தலங்களில் இது செவ்வாய் தலம். இந்தப் பெருமாள் தன் வலது தோளுக்குக் கீழே நவநிதிகளையும் பாதுகாத்து வருவதாக ஐதீகம்.* கடலூர் – சிதம்பரத்தில் கிடந்த நிலையில் மூலவர் கோவிந்தராஜனாகவும் இருந்த நிலையில் உற்சவர் தேவாதிதேவனாகவும் பெருமாள் அருள்கிறார். பெருமாளின் நாபிக்கமல பிரம்மா நின்ற நிலையில் இருப்பது சிறப்பு.* கும்பகோணத்தில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாளை உத்தான சயன கோலத்தில் தரிசிக்கலாம். இத்தல பெருமாள் வைகுண்டத்திலிருந்து வந்ததால் இத்தலத்தில் சொர்க்கவாசல் இல்லை.* கேரளம், திருவனந்தபுரத்தில் ஹரிலட்சுமியோடு அனந்தபத்மநாபர் சயனக் கோலத்தில் திகழ்கிறார். இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உற்சவத்தின்போது ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இங்கு அனுமனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் உருகுவதும் இல்லை. கெடுவதும் இல்லை!* காஞ்சிபுரம் – திருவெஃகாவில் சொன்னவண்ணம் செய்த பெருமாளை வலமிருந்து இடமாக அதிசய சயனத் திருக்கோலத்தில் காணலாம்.

* சென்னை – பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் ரங்கநாதப் பெருமாள் மலை உச்சியில் அருளாட்சி புரிகிறார். இத்தலத்தில் நின்றான், இருந்தான், கிடந்தான், அளந்தான் எனும் பெயர்களில் பாலநரசிம்மர், உலகளந்தபெருமாள், ரங்கநாதர், நீர்வண்ணர் ஆகிய நான்கு திருவடிவங்களை தரிசிக்கலாம்.

– ஜெயலட்சுமி…

The post சயனக் கோலம் கொண்டருளும் அரங்கனின் ஆலயங்கள் appeared first on Dinakaran.

Tags : Arangan ,Sayanak Temple ,Rangam ,Vaikundam ,Sayanak ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...