×

நல்வாழ்வு அருள்வார் லட்சுமி நரசிம்மர்

*நலம் தரும் நரசிம்மர் தரிசனம்  23ஆந்திர மாநிலத்தில் அகோபிலத்தில் நவநரசிம்மர், சிங்கப்பெருமாள் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர், பழைய சீவரத்தில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் என நரசிம்மர் பல தலங்களில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களைக் காத்தருள்கிறார். குளிர் அருவிபாயும் வேங்கட மாமலையில் திருமகளை திருமார்பில் தாங்கி திருத்தக்க செல்வமும் யாமருள்வோம் என கருணையுடன் காட்சியளிக்கும் திருவேங்கடவனை வணங்குவோம். குன்றுதோராடி குவலயம் காக்கும் குமரனை தமிழ்க்கடவுளாகப் போற்றுவோம். மலையினையோ, குன்றினையோ தங்களது இருப்பிடமாக வைத்துக் கொண்டு அதிக அளவில் அருளாட்சி புரியும் தெய்வங்கள்ஒருவர் திருமாலும், மால் மருகனாகிய முருகனும்..  திருமால் திருவேங்கடவனாக அருள்புரியும் திருப்பதி உலகப் பிரசித்தி பெற்றது.தமிழக வைணவத் தலங்களில், “ஸ்ரீநிவாசன்’ என்ற திருநாமத்துடனோ அல்லது “வெங்கடேசன்’ என்ற திருப்பெயருடனோ பல ஆலயங்களில் திருமால் வீற்றிருந்து அருள்புரியும்  தலங்களை  திருப்பதியை நினைவு கூறும் வகையில்  “தென்திருப்பதி’ என்று பக்திப்பரவசத்துடன் அழைத்துப் பெருமையடைகிறோம். அவ்வகையில் மதுராந்தகத்தின் வட கிழக்குப் பகுதியில், சூணாம்பேட் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரவாடி கிராமத்தில் ஒரு வைணவத் தலத்தை உருவாக்கி, அதற்குப் புதுமையாக “நயா திருப்பதி’ என்று பெயர் சூட்டியுள்ளது, “ஸ்ரீவேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை’ என்ற அமைப்பு. தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆலயத்தின் அருகில் உள்ள மலையில் (சுமார் 1500 அடி உயரம்) ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலையும்  தற்போது கட்டியுள்ளனர்.  மலையின் அடிவாரத்தில் ஏற்கனவே “பிரசன்ன வெங்கடேசப்  பெருமாள்’ கோயிலை இந்த அறக்கட்டளை கட்டியுள்ளது.  நூதன நரசிம்மர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ள மலைக்கு “சிம்மகிரி’ மலை என்று பெயர் சூட்டியுள்ளனர். பூரிஜெகந்நாதர் ஆலயத்தை நினைவுபடுத்தும் விதமாக பெருமாளின் கர்ப்பகிரக விமானம்  (ஒடிசா) கட்டிடப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்றாற்போல் இங்கு இறை மூர்த்தங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவர்களும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்களே! சுமார் 51/2 அடி உயரத்தில் அருளும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருமார்பை நேபாள மன்னர் அளித்த 108 எண்ணிக்கையில் உள்ள சாளக்கிராம மாலை அலங்கரிக்கிறது.  தாயார் சிலையும், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் வடிக்கப்பட்டுள்ளன. சுமார் 255 படிகளைக் கடந்து சென்றால் ‘‘பேழ்வாய்’’ என்று திருமங்கை ஆழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அகன்ற பெரிய வாயுடன் நரசிம்மரின் திருமுகமே ஆலய நுழைவு வாயிலாக கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் முக வாயிலில் கிரீடம் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டு வண்ணத்துடன் மிளிர்கிறது. இந்த கிரீடம் திருப்பதியில் வேங்கடவனின் திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் போலவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நுழைவு வாயிலின் அருகே ஒருபுறம் பெரிய திருவடியும், மறுபுறம் சிறிய திருவடியும் கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். கல்லினால் செய்யப்பட்ட இந்த நரசிம்ம வாயிலுக்கு சூரிய சந்திரனாய் இரண்டு கண்களும், சிங்கத்தைப் போல் பிடரி ரோமங்களும் நேர்த்தியாய் அமைத்துள்ளனர்.அழகான வேலைப்பாடு களுடன் அமைந்த மரக்கதவுகளில் நரசிம்மரை நின்ற கோலத்தில் செதுக்கியுள்ளனர்.துவாரபாலகரை அடுத்து கருவறையில் மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் 7 அடி உயரத்தில் தாயாரை இடதுபக்கத்தில் அணைத்த நிலையில் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். உட் பிராகாரம் ஒரு சதுர குகை வடிவில் (30 அடிக்கு 30 அடி) அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் அகோபில மடத்தில் காணப்படுவதைப் போல நவ நரசிம்மர் உருவச்சிலை சிமென்டினால் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. லட்சுமி நரசிம்மருக்கான சிறிய சந்நதி ஒன்றும் கீழே உள்ள வெங்கடாசலபதி  ஆலயத்தில் அமைந்திருக்கின்றது.  2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது இந்த மலைக்கோயில். மலையில் ஆஞ்சநேயரின் அம்சமான குரங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆனால், இவை பக்தர்களை எந்தவிதத்திலும் தொந்தரவும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குகைக்கு வெளியே ஒரு பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டி வெளிப்புறத்தில் லட்சுமிநரசிம்மருக்கு வலதுபுறத்தில் கருடாழ்வார், இடதுபுறத்தில் ஆஞ்சநேயர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரவாடிக்கு வரும் வயதான பக்தர்கள் லட்சுமிநரசிம்மரைத் தரிசிக்க வசதியாக மலை அடிவாரத்தில் லட்சுமிநரசிம்மருக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் கொடிமரமும் அதைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பக்கத்தில் ஆனந்தவல்லித் தாயார் , மற்றொரு பக்கத்தில் பாவன நரசிம்மர் அருகில் ஸ்ரீசனீஸ்வர பகவான் என தனித்தனி சந்நதிகள் உள்ளன. சனீஸ்வர பகவான், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சனிசிங்கனாப்பூர் சனீஸ்வரரை நினைவு படுத்தும் வண்ணம் உள்ளார். இந்த திருத்தலம் நவகிரக தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த வெகு அபூர்வமாக நவநரசிம்ம நவகிரக பீடம் அமைந்துள்ளது. ஒன்பது கிரகங்களுக்கும் அதிபதியாக ஒன்பது நரசிம்மர்களுடன் நவகிரக சந்நதி திகழ்கிறது. இந்த நவகிரக பீடத்தை தரிசித்து பக்தர்கள் தம் நவகிரக தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். மலையடிவாரக் கோயிலுக்கு சற்று தொலைவில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.இந்த பகுதியில் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும். ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் தானே விரும்பி ஆலயம் அமைத்துக் கொண்ட காரணத்தினால் இந்த இடம் ‘நயா திருப்பதி’ எனப்படுகிறது. இங்கு பத்மாவதித் தாயாரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் தனித்தனிச் சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். விநாயகர், தன்வந்திரி, ராகு-கேது, காளிங்க நர்த்தனக் கண்ணன் ஆகியோரையும் தரிசித்து மகிழலாம். ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயிலின் பின்புறத்தில் கிரிவலப்பாதையில் ஸ்ரீஏகாந்தஈஸ்வரர் என்ற பெயரில் இரட்டை லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற அமைப்பு வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. (தொலைபேசி தொடர்புக்கு : 9443240074) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் – செய்யூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது சித்திரவாடி ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோயில். இந்த கோயில் வரலாற்றை அறிந்து  கொள்ளலாம். சித்திரவாடி கிராமம் செல்ல மதுராந்தகத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன. (தரிசனம் தொடரும்)ந.பரணிகுமார்

The post நல்வாழ்வு அருள்வார் லட்சுமி நரசிம்மர் appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narasimha ,Narasimha ,Navanarasimha ,Agophilam ,Andhra ,Patalatri Narasimha ,Singaperumal ,Srilakshmina Narasimha ,Old Sivaram ,
× RELATED இந்த வார விசேஷங்கள்