×

KMC

நன்றி குங்குமம் டாக்டர்தமிழகத்தின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக பெயர் பெற்றிருக்கிறது கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி. சென்னையில் இயங்கும் ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, பன்னோக்கு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அடுத்ததான நான்காவது பெரிய மருத்துவமனை இது. பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் போலவே படு பிஸியாக இருக்கும் மருத்துவமனையை வலம் வந்தோம்.KMC என்றழைக்கப்படும் இதன் சிறப்புகள், வசதிகள், பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஆகியவற்றை மருத்துவமனையின் டீன் டாக்டர் வசந்தாமணி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.‘‘1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மருத்துவக்கல்லூரி. தொடக்க காலத்தில் School of Indian medicine என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. மெட்ராஸ் பிரசிடென்சியின் இரண்டாவது அமைச்சராக இருந்த ராஜா சர் பனகன்தி ராம்ராயநிஞ்சர் என்பவர் இந்த மருத்துவமனை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிலத்தைக் கொடுத்தார். அத்துடன் தன்னுடைய தனி மருத்துவரான டாக்டர் சீனிவாச மூர்த்தியை இந்த மருத்துவ சேவையைத் தொடரவும் செய்தார். இவ்வாறு தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் இண்டியன் மெடிசினுடைய முதல் பிரின்ஸ்பாலாக வைத்தியரத்தினம் டாக்டர் சீனிவாசமூர்த்தி இருந்தார்.1948-ம் ஆண்டில் இந்த மருத்துவக் கல்லூரிக்கு College of indigenous medicine என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் இங்கு ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யூனானி மற்றும் இன்டகிரேட்டட் கோர்ஸ் ஆகிய மூன்று வகையான இன்டிஜீனியஸ் மெடிசன் கற்று தரப்பட்டன. மேலும் அலோபதி மருத்துவ முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 1953-ம் ஆண்டில் இந்தக் கல்லூரி காலேஜ் ஆஃப் இன்டகிரேட்டட் மெடிசன் என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்டகிரேட்டட் மெடிசன் கோர்ஸ் ஆன எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1965-ம் ஆண்டில் இந்தக் கல்லூரிக்குப் பெண்கள் மருத்துவக் கல்லூரி என்ற அங்கீகாரம் தரப்பட்டது. பின்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. MBBS பட்டப்படிப்புக்குப் பெண்களை மட்டும் அனுமதித்து வந்த இந்தக் கல்லூரி நிர்வாகம் 1971-ம் ஆண்டிலிருந்து, ஆண்கள், பெண்கள் என இரண்டு பாலினத்தாரையும் இந்தப் பட்டப்படிப்பிற்கு சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தது.1972-ம் ஆண்டில் இந்த மருத்துவக் கல்லூரி சர்ஜிக்கல் பிளாக் என்ற நவீன வசதியுடன் வளர்ச்சி பெறத் தொடங்கியது. 1972-ம் வருடம் முதல் 2001-ம் ஆண்டு வரை இந்த மருத்துவமனையில் பல்வேறுபட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலேயே சிறந்து விளங்கும் மருத்துவமனைகளின் தர வரிசைப்பட்டியலில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.1987-ம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது இம்மருத்துவமனை. தற்போது தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுப்பாட்டின்கீழ், அரசு பொது மருத்துவமனை(ராயப்பேட்டை), அரசு திருவொட்டீஸ்வரர் ஹாஸ்பிட்டல் ஆஃப் தொராசிக் மெடிசன்(ஓட்டேரி), அரசு பெரிபெரல் மருத்துவமனை(கே.கே.நகர் மற்றும் அண்ணா நகர்) ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இந்த மருத்துவமனை மற்றும் கல்லூரியில், 76 மருத்துவர்கள், ஸ்டாஃப் நர்ஸ் 225, நிர்வாக அலுவலர்கள் 66, பாரா மெடிக்கல் ஸ்டாஃப் 281, கடைநிலை ஊழியர்கள் 230, தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 393 பேர் என ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஓர் ஆண்டில் சராசரியாக 17 ஆயிரம் மைனர் ஆபரேஷனும், 10 ஆயிரம் மேஜர் ஆபரேஷனும் செய்து வருகிறோம். 1138 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனைக்குத் தினசரி புறநோயாளிகளாக 4 ஆயிரம் முதல் 4, 500 பேரும், உள்நோயாளிகளாக சராசரியாக ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். வருடத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும், சுமார் 10 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர். இதுவரை, 40 பேர் இங்கு டீன்களாகப் பணியாற்றி உள்ளனர்.’’டாக்டர் தேவி மீனாட்சி(பச்சிளம் குழந்தைகள் பிரிவு)‘‘பச்சிளம் குழந்தைகளுக்கான இந்தப்பிரிவில் மொத்தம் 40 படுக்கைகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காகச் சேரும் குழந்தைகளை, நோயின் தன்மையைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரித்து கொள்கிறோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள், மிதமான காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகள், சாதாரண காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகள் என வகைப்படுத்தி தீவிர சிகிச்சை கொடுக்கிறோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளை லெவல் 3 கேர் என குறிப்பிடுகிறோம். இங்கு குழந்தைகளின் உடல்நிலையைக் கண்காணிக்கத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கும். எங்களிடம் ஒவ்வொரு படுக்கைக்கும் ஒன்று என 40 வென்டிலேட்டர் (சுவாசக் கருவிகள்) உள்ளன.குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், பிறந்த உடனே மூச்சு எடுத்து அழாமல் இருத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கும்போது, இந்த சுவாசக் கருவிகள் உடனடியாகப் பொருத்தப்படும். அதன்பின்னர் அந்தக் குழந்தைகளுடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். முக்கியமாக, அந்த சிசுக்களுடைய இதய துடிப்பு, சுவாசம் விடுகிற திறமை, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு போன்றவை எல்லாம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதனடிப்படையில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொடுக்கப்படும்.லெவல்-3 கேரில் உள்ள குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்போது, அவர்களை லெவல் -2 கேருக்கு மாற்றுவோம். அங்கு அவர்களுக்கு டியூப் மற்றும் பாலாடை மூலமாக பால் புகட்டுவோம். இவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கொடுக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகளால், அவதிப்படுகின்ற குழந்தைகளுக்குப் போட்டோதெரபி என்று சொல்லப்படுகிற லைட்டின் கீழ் வைத்து சிகிச்சை தருகிற வசதியும், ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதியும் இங்குள்ளது. இந்த லெவலில் உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும் குழந்தைகளைத் தாயுடன் தங்க அனுமதிப்போம். இதற்கென்றே பக்கத்தில் Mothers room உள்ளது. அங்கு இளம் தாய்மார்களுக்குப் பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பது பற்றி சொல்லித் தருவோம். அவர்களுக்கு மனதளவில் தெம்பு வந்தபிறகே, டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்புவோம்.’’டாக்டர். விவேகானந்தன் (குழந்தைகள் நல மருத்துவர்)‘‘கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவில் பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள் தீவிர கண்காணிப்பு, DEIC எனச் சொல்லப்படுகிற District Early Intervention Centre என மூன்று சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இது மட்டுமில்லாமல், ஜெனரல் வார்டு, ஃபீவர் வார்டு என தனித்தனியாக இயங்கி வருகிறது. குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் மிகவும் நோய்வாய்ப்பட்ட, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. அக்குழந்தைகளுடைய உடல்நலம் சீரானவுடன், அவர்களை ஜெனரல் வார்டுக்கு மாற்றி விடுவோம். முக்கியமாக இங்கு தீப்புண், தீவிர ஆஸ்துமா, வலிப்பு நோய், இதயம் தொடர்பான பாதிப்புகள், டைபாய்டு, டெங்கு முதலானவற்றிற்கு சிகிச்சை தரப்படுகிறது. கடந்த ஆண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் முழுவதுமாக குணப்படுத்தி அனுப்பினோம். மற்ற மருத்துவமனைகளுடன் ஒப்பிடுகையில் இங்கு குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவு.’’டாக்டர் மீனா(மகப்பேறு மற்றும் மகளிர் நலம்)‘‘இந்த வார்டில் டெலிவரி மட்டுமில்லாமல், பெண்களுக்கு ஏற்படுகிற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். ஒரு மாதத்தில் குறைந்தது 500 முதல் 600 குழந்தைகள் இங்கு பிறக்கின்றன. குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் இங்கு செய்யப்படுகிறது. மைக்ரோ சர்ஜரியில் நம் மருத்துவமனை தலைசிறந்து விளங்குகிறது. அதாவது, டியூப்பில் பிளாக் போன்றவை இங்கு சிறப்பான முறையில் சரி செய்யப்படுகின்றன. முக்கியமாக, குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு எதிர்பாராதவிதமாக குழந்தைகளை இழக்க நேரிடலாம். சிலருக்கு இரண்டாவது திருமணம் செய்யவும் நேரிடும். அதுமாதிரியான சமயங்களில் கருக்குழாயை மீண்டும் இணைக்கும் வசதியும்; இயங்கி வருகிறது. அது மாதிரியான அறுவை சிகிச்சைகளை வருடத்துக்கு 100 முதல் 120 வரை செய்கிறோம். இங்கு சிறுநீரகவியல், இரைப்பை மற்றும் குடலியல் என எல்லா சிறப்பு மருத்துவர்களும் உள்ளனர். பயிற்சி மருத்துவர்கள் 30 பேர் உள்ளனர். மாணவர்கள் 150 பேர் உள்ளனர்.’’; ;ரோசில்தாவீராய் (செவிலியர் பொறுப்பாளர்)‘‘நான் கடந்த 36 ஆண்டுகளாக செவிலியர் துறையில் சேவையாற்றி வருகிறேன். இந்த மருத்துவமனையில் மட்டும் 33 ஆண்டுகள் பணியாற்றுகிறேன். என்னோடு சேர்த்து 240 செவிலியர்கள் இங்கு சிறப்பாக, மூன்று ஷிஃப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள். இந்த மருத்துவமனையில் தீக்காயத்திற்கென சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களும் இருக்கிறார்கள். இது மற்ற செவிலியர் பணியை விட மிகவும் குறிப்பிடத் தகுந்தது ஆகும். நோயாளிகள் முன்பை விட இப்போது நல்ல புரிதலோடு இருக்கிறார்கள். எங்களுடைய சேவையிலும் மக்கள் நலன் கருதி மாற்றம் ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணம். உள்நோயாளிகள் எங்களின் பேச்சை கேட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். மெளலிவாக்கம் கட்டிட விபத்து, வர்தா புயல், கொடுங்கையூர் தீ விபத்து போன்ற நேரங்களில் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றினோம்.’’சங்கீதா (உணவு முறையாளர்)‘‘இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருக்கும் 650 நோயாளிகளுக்கும் இங்கு அவர் அவர் உணவு முறைப்படி உணவு தயாரித்து தருகிறோம். குழந்தைகள் டயட், டிபி, காசநோயாளி டயட், நீரிழிவு நோயாளி, இதய நோயாளி முக்கியமாக தீ காயம் ஏற்பட்ட நோயாளி என 8 வகை டயட் முறை உணவுகள் தயாராகிறது. உணவினை தனி தனியான முறையில் சுத்தமான முறையிலும், ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இங்கு தயாராகி நேரடியாக நோயாளிகளின் இருக்கைக்கு அனுப்புகிறோம். நோயாளிகளுக்கு உணவு எடுத்தும் செல்லும் வசதியை பொறுத்தளவு தள்ளுவண்டியில்தான் எடுத்து செல்கிறோம். பேட்டரி மூலம் இயங்கும் வாகனம் பயன்படுத்துவற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.’’டாக்டர் கார்த்திகேயன்(தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு)‘‘1971-ல் இந்த மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக துவங்கப்பட்டு செயல்பட்டது. 1981-ல்தான் தீக்காய சிகிச்சை பிரிவு முதன் முதல் துவங்கப்பட்டது. இந்தியாவில் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிப்பதில் இது டெல்லிக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனையில் தீக்காயத்திற்கும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் சேர்த்து தனியான 2 அடுக்கு மாடி கட்டிடம் 2017-ல் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த துறைக்கு என தனியான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இந்த துறை 24 மணி நேரமும் இயங்குகிற துறையாக இருக்கிறது. இந்த பிரிவில் தீக்காயம், சூடான திரவ பொருள் பாதிப்பு, அமிலம் பாதிப்பு மின்சாரம் பாதிப்பு போன்ற பாதிப்புகளுக்கு இங்கு; தீவிர சிகிச்சையினை சிறப்பாக அளித்து வருகிறோம். ;இங்கு 60 தீக்காய உள்நோயாளிகள், 60 பிளாஸ்டிக் சர்ஜரி உள்நோயாளிகள் என 120 நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தனி சத்துணவுத்திட்டம் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு தனியாக சமைத்து அளிக்கப்படுகிறது. மேலும் 12 மருத்துவர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள், 125 பயிற்சி மாணவர்கள், 5 பிசியோ தெரபிஸ்ட், ஒரு மன நல மருத்துவர் என சிறப்பான குழு அமைத்து சிகிச்சை அளிக்கிறோம். மேலும், தீக்காய சிகிச்சைக்குப் பிறகு தோல் தானம் சிகிச்சை, தழும்பு நவீன சிகிச்சைகள் அளிப்பதற்கு இங்கு வசதிகள் இருக்கிறது.’’டாக்டர் ஆறுமுகம் (இதய சிகிச்சைத் துறைத் தலைவர்)‘‘இங்கு இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சை வசதிகளும் இருக்கிறது. பரிசோதனை கருவிகள் முதல் அறுவை சிகிச்சை வரை நவீன முறையில் எளிதாக சிகிச்சை அளிக்கிறோம். குறைந்த இதய துடிப்பு சிகிச்சை, அதிக இதய துடிப்பு சிகிச்சை, இதய ரத்தக்குழாய் அடைப்பு போன்ற அனைத்து இதய தீவிர சிகிச்சைகள் அளிக்கிறோம்.பேஸ்மேக்கர், எக்கோ மெஷின் வசதி, ஆஞ்சியோ சிகிச்சை வசதி என அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் இங்கு இருக்கிறது. தினமும் 120-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு ரூபாய் 5 கோடி மதிப்பிலான இதய சிகிச்சை கருவி இந்த மருத்துவமனையில் உள்ளது. இது சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பிறகு இங்குதான் உள்ளது.இந்தப்பிரிவில் மருத்துவர்கள் 7 பேரும் மொத்தம் 45 பணியாளர்களும் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். வருடத்திற்கு 1000 நோயாளிகளுக்கு இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’வேதரத்தினம் (கும்பகோணம்; – உள்நோயாளி)‘‘கடந்த மூன்று மாதத்திற்கு முன் நீரிழிவு நோயால் என்னுடைய வலது கால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு என்னுடைய வலது கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். தற்போது செயற்கைகால் பொறுத்துவதற்காக வந்திருக்கிறேன்.மருத்துவர்கள் செயற்கைக்கால் பொருத்திய பிறகு நான் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும் நம்பிக்கையையும் அளித்து வருகிறார்கள். இந்த வசதி எங்க மாவட்டம் தஞ்சாவூரில் இல்லை. அதனால் சென்னையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவமனையில் ரிசப்ஷன் இல்லாதது பெரிய குறை. இதனால் நோயாளிகள் தடுமாறும் சூழல் உள்ளது.’’தன்ராஜ் (உள்நோயாளி- அயனாவரம்)‘‘எனக்கு பிபி அதிகமாகி சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. மிகவும் மோசமான நிலையில் இந்த மருத்துவமனையில் சேர்ந்தேன். இங்கு உள்ள மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து என்னுடைய தந்தையாரின் சிறுநீரகத்தை தானமாக பெற்று எனக்கு பொருத்தி சிகிச்சை அளித்தார்கள். இப்போது இங்கு அரசு காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக சிகிச்சை பெற்று தற்போது உள்நோயாளியாக கூடுதல் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு நோய்த்தொற்று எளிதில் தொற்றும் அபாயம் இருப்பதால் என்னை தனியான அறையில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். நான் உணவு மட்டும் வீட்டிலிருந்து எடுத்துவந்து சாப்பிடுகிறேன். இந்த மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கென தனியான உணவு தயார் செய்து தரமுடியாத சூழல் உள்ளது. அதனால் வீட்டிலிருந்து எனக்கு உணவு தயார் செய்து தருகிறார். என்னைப் போன்ற சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கென தனியான சிகிச்சை பெறும் இடமும், உணவும் இங்கேயே தயார் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.’’குமாரி (புற நோயாளி – அரும்பாக்கம்)‘‘கடந்த இரண்டு நாட்களாக சளி தொந்தரவு இருக்கிறது. காலையில் 9 மணிக்கு வந்தேன். மருத்துவரை பார்த்த பிறகு மருந்து வாங்குவதற்காக நிற்கிறேன். ஓபி சீட்டு வாங்குகிற இடமும், டாக்டரைப் பார்க்கிற இடமும் மருந்து வாங்குகிற இடமும் ஒரே கூட்டமாக இருக்கிறது. கூட்டத்தைத் தவிர்த்து பார்த்தால் மற்றபடி டாக்டர்கள் நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளிகள் அதிகம் வருவதால் இட நெருக்கடியும் இங்கு அதிகமாக இருக்கிறது.’’– விஜயகுமார், க.இளஞ்சேரன்படங்கள் : ஆர்.சந்திரசேகர்

The post KMC appeared first on Dinakaran.

Tags : KMC ,Kunkumam ,Doctor ,
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...