×

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண்ணிலும் வரலாம்புற்றுநோய்

பல வருடங்களுக்கு முன்பாக சந்தித்த முதிய பெண்மணி அவர். உறவினர்கள் யாரும் இல்லை. அவரை அழைத்து வந்த அக்கம் பக்கத்தினர், ‘கண்களின் அருகில் நீண்ட நாட்களாக ஒரு புண் இருக்கிறது. சமீப காலமாக அதன் காரணமாக அவரால் கண்ணை மூடக் கூட முடியவில்லை’ என்றார்கள். ‘‘ஒரு சின்ன கொப்புளம் மாதிரி வந்தது, அதுக்கப்புறம் இப்படி ஆயிடுச்சு” என்பதைத் தவிர பாட்டிக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. ‘‘ஏதாவது களிம்பு குடுங்க. சரியாயிரும்” என்றே மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தார்.

பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடிக்கக் கூடிய நோய்கள் மனித உடலில் சில உண்டு. அதில் ஒன்றுதான் பாட்டிக்கும் வந்திருந்தது. கண்களுக்கு அருகில் இருக்கும் முகத்தின் தோல் பகுதியை தாக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றான Basal cell carcinoma அவருக்கு இருந்தது. வாயின் ஓரத்தில் இருந்து காதின் ஆரம்பத்திற்கு கற்பனையாக ஒரு கோடை வரைந்து கொள்ளுங்கள். அந்தக் கோட்டிற்கு மேல் இருக்கும் இடம்தான் இந்த வகைப் புற்றுநோய் அதிகமாக வரக்கூடிய இடம். வெண்மை நிறத் தோலையுடைய மேலைநாட்டவர்களில் மிக அதிகமாகக் காணக்கூடிய ஒரு புற்றுநோய் இது.

மாநிறத்தவர்களான நம் மக்கள் மத்தியில் அரிதாகவே இந்த நோய் காணப்படுகிறது. சூரியனில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் தோல் பகுதியைத் தாக்குவதே இதற்கு முக்கியக் காரணம். அதிலும் 290-320 nm அலைக்கற்றையிலுள்ள UVB வகை கதிர்களே இதற்கு மிக முக்கியமான காரணமாக அமைகின்றன. மேலைநாட்டவர்களின் சூரியக் குளியல் எடுக்கும் பழக்கமும் ஒருவகையில் அதிக அல்ட்ரா வயலட் கதிர்கள் தோலில் விழுவதற்கு ஏதுவாக அமைகிறது.

சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தவிர, கதிர்வீச்சினை சந்திக்கும் வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பாற்றல் குறைந்த நோயாளிகள், நீண்ட காலப் புண்களை உடைய நோயாளிகள் இவர்களுக்கும் கண்களின் அருகில் இந்தப் புற்றுநோய் ஏற்படக்கூடும். தோல்களின் நிறமி செல்களை அதிக அளவு பாதிக்கக்கூடிய நோய்கள் Xeroderma pigmentosum மற்றும் Albinism. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோலின் மேற்பரப்பில் மிகவும் ஆழமாக இல்லாமல், லேசான இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்துடன் ஒரு புண் காணப்படும். அதன் ஓரங்களைப் பார்த்தால் ஒரு துணியைச் சுருட்டி வைத்தாற்போல் இருக்கும் (pearly rolled up).

எலி தன் உணவை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து உண்பதைப் போல, இந்த புற்றுநோயும் தோலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதால் இதற்கு rodent ulcer என்ற பெயரும் உண்டு. பெரும்பாலான நோயாளிகள் அதை சாதாரணப் புண் என்றே கடந்து விடுவார்கள். நீண்ட நாளாக ஆறவில்லை என்றான பிறகு தான் தோல் மருத்துவரிடம் அல்லது பொது அறுவைசிகிச்சை மருத்துவரிடம் செல்வார்கள். கண்ணிற்கு வெகு அருகில் இருக்கக்கூடிய புண்கள் என்பதால் பல நோயாளிகள் கண் மருத்துவரிடமும் வருவதுண்டு. மேல் இமையை விட கீழ் இமையிலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதிகமாக வெயிலில் வேலை செய்யும் மனிதர்கள் தொப்பிகளை பயன்படுத்தினால் இந்த பாதிப்பு குறையும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள் சன் ஸ்கிரீன் லோஷன் போன்ற பாதுகாப்பு கிரீம்களும் சிறந்தவையே என்கின்றன.

அதிக சூரிய வெளிச்சம், அல்ட்ரா வயலட் கதிர்கள், எதிர்ப்பாற்றல் குறைபாடு, நிறமிகள் குறைபாடு, Albinism போன்ற இதே காரணங்களால் வரக்கூடிய இன்னொரு வகைப் புற்றுநோய் Squamous cell carcinoma. அது Basal cell carcinomaவைக் காட்டிலும் வேகமாக பரவக்கூடியது. மிக விரைவில் சிகிச்சை எடுக்கவில்லை எனில் உயிருக்கே ஆபத்தாக முடியக்
கூடும். அருகிலுள்ள நிணநீர் கட்டிகளுக்கும், நரம்புகளின் வழியே மூளைக்கும் முகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நீண்ட நாள் புண்கள், உலர்வுத் தன்மையை உடைய Actinic keratosis போன்ற சில தோல் பிரச்னைகள் போன்றவற்றில் இந்தப் புற்றுநோயை அதிகம் காண முடியும்.

மேற்கூறிய இரண்டு வகைப் புற்றுநோய்களையுமே பார்த்த மாத்திரத்தில் ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்க முடியும் என்றாலும் சந்தேகத்திற்கிடமான புண்/தோலில் இருந்து சில திசுக்களை எடுத்து பயாப்சி பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவார்கள். பின் அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்துவார்கள். பெரும்பாலான கண்களை சுற்றி உள்ள புற்றுநோய்கள் கீழ் இமைப்பகுதியில் இருக்கிறது, வயதானவர்களையே தாக்குகிறது என்பதால் நவீன அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக அகற்ற முடியும். சில நோயாளிகளுக்கு கூடுதலாக ரேடியோதெரபி, கீமோதெரபி இவை தேவைப்படும். ரேடியோதெரபி சிகிச்சை சிறப்பாக செயல்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று Basal cell carcinoma.

இன்னொரு முக மிகத் தீவிரமான, கவனிக்காமல் கடந்து விடக்கூடிய இன்னொரு வகைப் புற்றுநோயும் கண்களைத் தாக்குவது உண்டு. அதன் பெயர் Malignant melanoma. உடலில் நிறமி செல்கள் (melanocytes) அமைந்திருக்கும் எந்தப் பகுதியிலும் இது வரக்கூடும். கண்களில், நிறமி செல்கள் அதிகமுள்ள பகுதிகளான iris, ciliary body, choroid போன்ற பகுதிகளிலும் இந்தக் கட்டி தோன்றலாம். இந்தப் பகுதிகள் ரத்த நாளங்களும் அதிகம் நிறைந்தவை என்பதால் இந்தப் புற்றுநோய் வேறு உறுப்புகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

சில சமயங்களில் வெள்ளை விழியில் (conjunctival melanoma) இந்தக் கட்டிகள் தோன்றக்கூடும். உடலெங்கிலும் உள்ள கருப்பு நிற மச்சங்களில் ஒன்று திடீரென்று பெரிதாகத் தோன்றினாலோ, ஏற்கனவே இருக்கும் கருப்பு மச்சங்களுக்கு அருகில் தடிமனாக, வலியுடன் கூடிய கருப்பு நிறத் தடிப்புகள் தோன்றினாலோ இந்த நிலையை சந்தேகிக்க வேண்டும். கண்களின் வெள்ளைப் பகுதியில் சிலருக்குப் பிறவியிலேயே சிறிய மச்சங்கள் (naevus) இருக்கும். வெகு அரிதாக அவை கட்டிகளாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே வருடாந்திரக் கண் பரிசோதனையின் போது ஏற்கனவே இருக்கும் மச்சங்களின் அளவையும் கவனித்தால் நலம்.

இது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைதான். கண்ணில் மச்சம் இருக்கும் அனைவருமே கவலைப்படத் தேவையில்லை. இருந்தாலும் உடலில் எந்த பகுதியில் ஏற்கனவே இருக்கும் சாதாரண பிரச்னை பெரிதாக ஆனாலும் மருத்துவரை நாட வேண்டும். விழித்திரை அருகில் உள்ள choroidal melanoma மூளைக்கும் உடலெங்கும் பரவி விட வாய்ப்பிருக்கிறது. அதனால் கண்டுபிடித்த மாத்திரத்திலேயே உடனடி சிகிச்சை அவசியம். சிலருக்குக் கண் பந்தையே அகற்ற வேண்டியதாக இருக்கும் (Enucleation). ஒருவருக்கு பலனோமா புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் அவரது உயிரைக் காப்பாற்றுவதே மருத்துவரின் லட்சியமாக இருக்கும். இந்தத் தீவிர வகைப் புற்றுநோயில் கண்ணை இழப்பதை எண்ணித் தயங்குதல் கூடாது.

திடீரென்று பார்வை மங்கலாகத் தெரிகிறது என்று வந்தார் ஒரு 50 வயது பெண்மணி. பரிசோதனை செய்து பார்க்கையில் அவரது விழித்திரையில் கருப்பாகப் பெரிய கட்டி காணப்பட்டது. உடனடியாக மூளைக்கு ஸ்கேன், முழு உடல் பரிசோதனை என்று செயல்பட்டதில் malignant melanoma உறுதிசெய்யப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவருடைய கண் பந்து முழுவதுமாக அகற்றப்பட்டு விட்டது.

ஆரம்பத்தில் அவருடைய உறவினர்கள், ‘‘கண்ணை எடுத்துட்டா பார்க்க அசிங்கமா இருக்குமே?” என்று வெகுவாகத் தயங்கினர். இதேபோல் தாமதித்த இன்னொரு நோயாளிக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே உயிரிழப்பு ஏற்பட்ட நிலையைக் கூறி அவர்களை வழிநடத்தினோம் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டதால் அவர்கள் உயிர் தப்பித்தது! இன்று கண்பந்து இருந்த இடத்தில் பொம்மைக் கண் (prosthetic eye) பொருத்தி அந்தப் பெண் ஓரளவு இயல்பான வாழ்வையே வாழ்கிறார்.

துரதிஷ்டவசமாக, பெரும்பாலானோருக்கு இந்த வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் பொழுதே மூளை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவி விடுவதால், இந்த வகை கட்டிகளின் சிகிச்சை கடினமாகவே இருக்கிறது. ஆறுதலான ஒரு விஷயமாக, நம் நாட்டில் இந்த வகைப் புற்றுநோய் மிக மிக அரிது. வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்படுகிறது. இளம் நிறத்தில் கிருஷ்ண படலம் இருப்பவர்களுக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலருக்கு மரபணு மாற்றங்களால் பாதிக்கப்பட்டோர்க்கும் இந்தப் புற்றுநோய் அதிகம் தாக்குகிறது.

முதலில் கூறிய பாட்டிக்கு துணைக்கு ஆளில்லாததால், எத்தனையோ முறை அறிவுறுத்தியும் சிகிச்சையைத் தொடரவில்லை. அதன் பின் அவரை அழைத்து வந்தவர்கள் மூலமாக அவரது நிலையை அறியத் தொடர்பு கொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்கவில்லை. அப்படி இல்லாமல் எந்த சந்தேகத்திற்குரிய புண்ணாக இருந்தாலும் உடனடி சிகிச்சை அளித்தால் அவர்களால் தங்கள் இயல்பான வாழ்நாளை எந்த பிரச்னையுமின்றி கழிக்க முடியும். ‘‘புற்றுநோயா? கண்ணிலா?!‘‘ என்று கவலைப்பட வேண்டாம்.

The post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dr ,Kanlan ,Dinakaran ,
× RELATED மனவெளிப் பயணம்