×

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இஞ்சியைச் சமையலுக்கு மற்றும் தேநீருக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இஞ்சி இருந்தால் உண்மையில் வெட்டிச்செலவு பலவும் மிச்சம் ஆகும். எனவே, நோய்களை நீக்குவதில் இஞ்சியை சமையலறை மருத்துவர் என்றே சொல்லலாம். இஞ்சியின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம்.இஞ்சிச்சாறைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியில் துவையல், பச்சடி வைத்துச் சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்புவலி, தீரும். இஞ்சியைச் சுட்டு சிறிது உப்பில் தோய்த்துச் சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சிச்சாறில் வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கிச் சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.இஞ்சியைத் துவையலாக்கிச் சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சிச்சாறில் உப்புக் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தத் தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து ஒரு கோப்பை வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்புவலி தீரும். இஞ்சிச் சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்துவிடும்.

இஞ்சிச்சாறில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். இஞ்சி, மிளகு இரண்டையும் அரைத்துச் சாப்பிட ஜீரணம் ஏற்படும்.இஞ்சியை வதக்கி தேன்விட்டுக் கிளறி நீர்விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர, வயிற்றுப் போக்கு தீரும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின் நீரை எடுத்து துளசி இலைச்சாறைச் சேர்த்து ஒரு கரண்டி சாப்பிட்டுவர நோய்த் தடுப்புத்திறன் கூடும். உற்சாகம் ஏற்படும், இளமை பெருகும்.

இஞ்சிச்சாறுடன் வெங்காயச்சாறு கலந்து ஒருவாரம் காலையில் ஒரு தேக்கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சிச்சாறு எலுமிச்சம் பழச்சாறு, வெங்காயச்சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை ஒரு அவுன்ஸ் சாப்பிட்டுவர ஆரம்பக்கால ஆஸ்துமா, இளைப்பு, இருமல் குணமாகும்.

தொகுப்பு: தங்க. சங்கரபாண்டியன்

The post இஞ்சியின் மருத்துவப் பயன்கள்! appeared first on Dinakaran.

Tags : Ginger ,Dinakaran ,
× RELATED கடாய் பனீர்