×

குழந்தையை கொன்றதாக வழக்கு 17 ஆண்டுக்கு பின் தாயின் ஆயுள் தண்டனை ரத்து: ‘நிரபராதி ஆனார் சகுந்தலா’

மதுரை: குழந்தையை கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் தாயின் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். மனைவி சகுந்தலா (49). இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 மகள்கள். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சகுந்தலா 2002ல் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்தது. செல்வராஜின் புகாரின்பேரில், போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில், சகுந்தலா தனது குழந்தையை கிணற்றில் வீசியதாக கூறி கொலை வழக்காக மாற்றம் செய்து அவரை கைது செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நீதிமன்றம், சகுந்தலா மீதான கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபட்டதாக கூறி அவருக்கு கடந்த 2004ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் அவர் அப்பீல் செய்தார். இந்த வழக்கில் முதலில் ஜாமீன் கிடைத்தது. ஜாமீனின் வெளியே வந்த அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கடந்த 2014ல் அப்பீல் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதனால் சகுந்தலா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சகுந்தலா தரப்பில், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதில், சகுந்தலாவிற்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கை ஐகோர்ட் கிளை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.அதன்படி, மதுரை ஐகோர்ட்டில் சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனையை உறுதி செய்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்குபின் முரணாக உள்ளது. இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இந்த வழக்கிலிருந்து வித்தியாசமான தகவலை அளிக்கிறது. அதாவது கிணற்றில் கிடந்த குழந்தையின் குடலிலோ, நுரையீரலிலோ தண்ணீர் இல்லை. கண் மூடிய நிலையில் இருந்தது. எனவே குழந்தை இறந்த பிறகுதான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. சகுந்தலா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போது குழந்தையை அழைத்து செல்லாமல் தனியாகத்தான் சென்றுள்ளார். எனவே சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர் மீதான தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்ய வேண்டும் என சகுந்தலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் விசாரித்தனர். சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விஷயத்தில் சின்ன சின்ன விஷயங்களை கூட சரியாக விசாரிக்கப்படவில்லை.  சாட்சிகளின் தகவலின்படியே விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே, மனுதாரர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கான தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரிடம் அபராத தொகை வசூலித்து இருந்தால் அதனை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம், 17 ஆண்டு குற்றவாளியாக கருதப்பட்ட சகுந்தலா நிரபராதி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிணற்றில் கிடந்த குழந்தையின் குடலிலோ, நுரையீரலிலோ தண்ணீர் இல்லை. கண்  மூடிய நிலையில் இருந்தது. எனவே குழந்தை இறந்த பிறகுதான் கிணற்றில்  வீசப்பட்டுள்ளது. சகுந்தலா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போது  குழந்தையை அழைத்து செல்லாமல் தனியாகத்தான் சென்றுள்ளார். எனவே சகுந்தலா  மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை….

The post குழந்தையை கொன்றதாக வழக்கு 17 ஆண்டுக்கு பின் தாயின் ஆயுள் தண்டனை ரத்து: ‘நிரபராதி ஆனார் சகுந்தலா’ appeared first on Dinakaran.

Tags : Sakunthala ,Madurai ,Trichy District ,
× RELATED ஐடி அதிகாரிகள் என கூறி ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம், நகை கொள்ளை