×

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை: இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியும், தாம் இதுகுறித்து ஏற்கெனவே 20.10.2023 அன்று கடிதம் எழுதியிருந்ததை குறிப்பிட்டு, அதில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பதிவு-69 இல் “மக்கள் தொகை கணக்கெடுப்பு” ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளதையும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948-இல் உள்ள விதிகளின்படி நடத்தப்படுவதையும், தற்போது, பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் சாதிவாரியான மற்றும் பழங்குடி வாரியான தரவுகள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் கீழ் கணக்கிடப்படுவதையும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நமது நாடு வளரும் நாடு என்ற முறையில், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என்று தாம் கருதுவதாகவும், பின்தங்கிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கைகளை வகுப்பதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருந்து வருவதால், சாதி அடிப்படையிலான சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் பொதுக்களத்தில் கிடைக்கச் செய்வது அவசியம் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கக்கூடிய சமூகப் பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படும்போது, அவை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் தன்மையைப் பெறும் ஆயினும், 1931-இல் இந்தியாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு சமகால தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் உள்ள பல்வேறு சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலை தொடர்பான அளவிடக்கூடிய தரவுகளின் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மேற்குறிப்பிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மத்திய அரசை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (26-6-2024) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்டு, தீர்மானத்தின் நகலை இணைத்து அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நிறைவேற்றுவார் என்று தாம் எதிர்நோக்குவதாகவும் தம்முடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : MINISTER ,SATIWARI CENSUS ,INDIA ,K. Stalin ,Modi ,Chennai ,Chief Minister MLA ,Akaditam ,Satiwari ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்