மலையாளத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படம், வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் தமிழ் பதிப்புக்காக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டொவினோ தாமஸிடம், ‘உங்களுக்கும், துல்கர் சல்மானுக்கும் என்ன பிரச்னை?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இப்படத்தின் கதை கடந்த 1957ல் நடக்கிறது. அக்காலத்தில் நடந்த சில உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், பல்வேறு கற்பனை விஷயங்கள் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மதம் தொடர்பான கதையா, அமானுஷ்ய கதையா, திரில்லர் அல்லது பழிவாங்கும் கதையா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது.
எனது கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருக்கிறோம். படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பல்வேறு உண்மைகள் தெரியவரும். தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்க்க முடிவு செய்துள்ளேன். ‘பள்ளிச்சட்டம்பி’ என்றால், தேவாலய காவலர் என்று அர்த்தம். எனது ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில் நடித்தபோது எனக்கும், துல்கர் சல்மானுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். அடிக்கடி பேசிக்கொள்கிறோம்.
அதற்கு ஆதாரமாக வாட்ஸ்அப் சாட்டை காண்பிக்க தயார். எங்களுக்கு இடையே ஏதோ பிரச்னை இருப்பதாக சிலர் வதந்தி பரப்பி சந்தோஷப்படுகின்றனர். நாங்கள் சந்திக்கும்போது, இதுபோன்ற செய்திகளை படித்துவிட்டு சிரிப்போம். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘தீவிரம்’ என்ற படத்தில் முதல்முதலாக உதவி இயக்குனராக பணியாற்றினேன். பிறகு ‘ஏபிசிடி’ என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தேன். மீண்டும் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினோம். இப்போது அடுத்த பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக துபாய் சென்று வந்தோம்’ என்றார்.

