‘லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து சரவணன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘லீடர்’. வரும் 3ம் தேதி திரைக்கு வரும் இதை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். படம் குறித்து சரவணன் கூறுகையில், ‘ஒரு தந்தை, மகளின் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும்போது, அவர்களின் வாழ்க்கையில் ஒரு கேங்ஸ்டர் குறுக்கிடுகிறார். பிறகு நடக்கும் சம்பவங்களை, இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் படமாக்கியுள்ளோம். குத்துப்பாடல்கள் கிடையாது.
கதையுடன் இணைந்து பயணிக்கும் பாடல்கள் இடம்பெறுகின்றன. ஜார்ஜியா ஏர்போர்ட்டில் பகல் நேரத்திலேயே மைனஸ் 14 டிகிரி கடும் குளிரில் கை, கால்கள் உறைந்துவிடும் நிலையில், கடுமையாக உழைத்து படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்சில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களுடன், குறுகலான ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சமீபத்தில் படத்தை பார்த்த வெற்றிமாறன், தனுஷ் ஆகியோர், பிரமாண்டமாக இருப்பதாக பாராட்டினர்’ என்றார். பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், அறந்தாங்கி நிஷா, லால், இயல், பிரபாகரன், விடிவி கணேஷ், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர்.

