×

கேரளாவில் இன்று ஓணம் கொண்டாட்டம்: சபரிமலை, குருவாயூர் கோயில்களில் சிறப்பு பூஜை..! கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஓணப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இவ்வருடம் ஓணம் களையிழந்துள்ளது. முன்னதாக நேற்று புத்தாடைகள், பூக்கள் மற்றும் பொருட்கள் வாங்க திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட நகர் பகுதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராம புறங்களில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. ஓணத்தை முன்னிட்டு இன்று பெரும்பாலான வீடுகளில் அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. வழக்கமாக பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரிய அத்தப்பூ கோலங்கள் போடப்படுவது உண்டு. ஆனால் இவ்வருடம் எங்கேயும் போடப்படவில்லை. வீடுகளில் மட்டுமே ஓண பண்டிகை கொண்டாட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டதே இதற்கு காரணமாகும். இந்தநிலையில் இன்று ஓண பண்டிகையையொட்டி சபரிமலை, குருவாயூர் மற்றும் பத்மநாபசுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சபரிமலை கோயிலில் மட்டுமே 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில் உள்பட பிற கோயில்களில் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கேரளாவில் இன்று ஓணம் கொண்டாட்டம்: சபரிமலை, குருவாயூர் கோயில்களில் சிறப்பு பூஜை..! கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Onam ,Kerala ,Sabarimala ,Guruvayur ,Thiruvananthapuram ,Sabarimala Guruvayur ,Padmanabhaswamy ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்