×

பருவமழை, கிருஷ்ணா நீர் வரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 8.2 டிஎம்சியாக அதிகரிப்பு

சென்னை: பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து போன்றவற்றால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 8.2 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீரான குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வந்து விடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்து வருவதாலும், இந்த ஏரிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு முறையாக குடிநீர் விநியோகிப்பதாலும் தண்ணீர் பிரச்னை இல்லாத நிலை உள்ளது. ஆனாலும், கோடை காலமான கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் இந்த ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது. எனவே கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கான தண்ணீரை ஆந்திர அரசிடம் கேட்டு பெற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் எடுத்த முயற்சியால், தமிழகத்துக்கான தண்ணீரை ஆந்திர அரசு திறந்துவிட்டுள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதியில் தற்போது போதுமான அளவு மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீருடன், மழைநீரும் வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 2201 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மற்ற ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி, சோழவரம் ஏரியில் 616, புழல் ஏரியில் 2,534, கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 482, செம்பரம்பாக்கம் ஏரியில் 2,455 மில்லியன் கன அடி என மொத்தம் 8,288 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் தண்ணீர் இருப்பு சராசரியாக 8.2 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. இதில் குடிநீருக்காக பூண்டியில் இருந்து 554 கன அடி, சோழவரம் ஏரியில் இருந்து 10, புழல் ஏரியில் இருந்து 161, கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகையில் இருந்து 15, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 161 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 7 டிஎம்சியாக இருந்த நிலையில் ஒரே மாதத்தில் ஒரு டிஎம்சி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் சென்னை மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீரான குடிநீர் தொடர்ந்து கிடைக்கும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post பருவமழை, கிருஷ்ணா நீர் வரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 8.2 டிஎம்சியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishna ,Chennai ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா...