சென்னை: வரும் 14ம் தேதி நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய படங்களுக்கு நிகராக ரீ-ரிலீஸ் படங்கள் அதிகமாக திரையிடப்படுகின்றன. வரும் 13ம் தேதி 3 படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. வரும் 14ம் தேதி ‘காதலர் தினம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் விவரம்: அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா நடித்த படம், ‘மௌனம் பேசியதே’. இப்படம் அமீருக்கும், திரிஷாவுக்கு அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்தனர். குணால், சோனாலி பிந்த்ரே நடித்த படம், `காதலர் தினம்’. டி.ராஜேந்தர் இயக்கி நடித்து இசை அமைத்த படம், ‘உயிருள்ளவரை உஷா’. இது கடந்த 1983ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி திரைக்கு வந்தது. கங்கா, நளினி, ராதாரவி, சரிதா, வெ.ஆ.மூர்த்தி நடித்திருந்தனர்.

