×

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கலைஞர் திருவுருவ படத்திறப்பு விழா: ஜனாதிபதி திறந்து வைக்கிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஆகஸ்டு 2ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருவதாகவும், அன்றைய தினம் சட்டப்பேரவையில் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கி விழாவினை நடத்திட வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் நான் கோரிக்கை வைத்தேன். 
அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அந்த விழாவில், கலைஞர் திருவுருவப்படத்தை சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறோம். மேலும், மதுரையில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமையவிருக்கக்கூடிய அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும், அதேபோல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமையவிருக்கக்கூடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார். தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்’ என்றார்.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம், தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும், சென்னை கடற்கரை சாலையில் அமைய உள்ள நினைவுத்தூண் அடிக்கல் நாட்டுக்கான பணிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இதுகுறித்து, தலைமை செயலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் தமிழகத்தில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிய முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப்பட திறப்புவிழா நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை வளாகத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விழாவிற்கு இந்திய குடியரசுத்தலைவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பிக்க உள்ளார். 
தமிழ்நாடு ஆளுநர் தலைமை ஏற்றி நடத்தி தரவும், தமிழக முதல்வர் முன்னிலை வகித்து நடத்தவும் இசைவு தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த நிகழ்ச்சிகளை தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் மூலம் சிறப்பாக நடத்துவதற்கு வேண்டிய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். படத்திறப்பு நிகழ்வில் மறைந்த முன்னாள் முதல்வர், நீண்ட நெடிய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமை குறித்து குடியரசுத்தலைவர், ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் பேசுவார்கள். எந்த பாகுபாடும் இன்றி படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கலைஞர் திருவுருவ படத்திறப்பு விழா: ஜனாதிபதி திறந்து வைக்கிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Kalyan Thiruvuruva Film ,Speaker ,Abba ,Chennai ,President ,Ramnath Kovind ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...