×

நசரத்பேட்டை – சிக்கராயபுரம் வரை மழைநீர் கால்வாய் பணி 90% நிறைவு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நசரத் பேட்டை – சிக்கராயபுரம் வரை மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் 6 கி.மீ கால்வாய் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும் மீதமுள்ள 10 பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மிதமான மழை பெய்தாலே சாலை எங்கும் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு எங்கெல்லாம் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது என்பது கண்டறியப்பட்டு அவற்றிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும் மழைநீர் வடிகால்கள் முறையாக தூர்வாராத காரணத்தால் தான் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டது. மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வாரி பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மழைநீர் எந்தத் தடையும் இன்றி செல்கிறது. அதேபோன்று,  வடகிழக்கு பருவமழையால் பெய்த கனமழை காரணமாக பூந்தமல்லி, மாங்காடு, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சென்னையை போன்று புறநகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களும் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் நகராட்சி துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார். மேலும், பணிகள் மெதுவாக நடைபெறும் இடங்களில் உள்ள நகராட்சி அதிகாரிகளை அழைத்து ஏன் பணிகள் மெதுவாக நடக்கிறது. அவற்றை விரைந்து முடிக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இதை தொடர்ந்து, பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகளில் மழைநீர் தேங்குவை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் நசரப்பேட்டையில் இருந்து சிக்கராயபுரம் கல்குவாரி வரை 6 கிலோ மீட்டர் நீளத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று நகராட்சி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி கூறுயதாவது: பூந்தமல்லி நகராட்சியில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நசரத்பேட்டை முதல் சிக்கராயபுரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு  8 முதல் 14 அடி அகலமும், 2 முதல் மூன்றரை அடி ஆழத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்தள்ளது. இந்த மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவதும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 100 ஏக்கர் கல்குவாரியில் இந்த மழைநீர் சேகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்குவாரியில் சேமிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு செய்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….

The post நசரத்பேட்டை – சிக்கராயபுரம் வரை மழைநீர் கால்வாய் பணி 90% நிறைவு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nasaratpet ,Chickarayapuram ,Administration ,Chennai ,Nasarath Bad ,Chickaraipuram ,Rainwater Canal ,Municipal Administration Officials ,
× RELATED பரிவாக்கம் சந்திப்பு,...