×

முல்லைப் பெரியாறு பராமரிப்பில் கேரள அரசு முட்டுக்கட்டை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கும் விவகாரத்தில் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காமல் முட்டுக்கட்டையாக இருக்கிறது என தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டுடன் கூடிய புதிய இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்து உத்தரவிட்டதோடு, அணை தொடர்பான விவகாரங்களை அக்குழுவிடம் முறையிட வேண்டும் என்றும், இதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் மனுக்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறில் பராமரிப்பு பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ள, முன்னதாக மாற்றி அமைக்கப்பட்ட அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அதேப்போல் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 15 மரங்களை வெட்டவும், சாலைகள் அமைக்கவும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதுகுறித்து அணை பாதுகாப்பு கண்கானிப்பு குழுவிடம் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை.அதனால் முல்லைப் பெரியாறின் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காகவும், பிரதான அணையில் சிமெண்ட் கலவை பூசுவதற்கும், அதேப்போன்று அணையில் இடது பகுதி உபரி நீர் மதகை சரி செய்வதற்கும், நிலநடுக்கங்களை கண்டறியும் ‘‘செஸ்மிக்” உபகரணத்தை அமைக்கவும், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பும், உரிய அனுமதியையும் தமிழகத்துக்கு அளிக்கவும் வேண்டும். இதைத்தவிர முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர் வரத்தை கண்டறியும் உபகரணத்தை கேரள அரசு அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் முல்லைப் பெரியாறில் புதிய படகுகளை விடவும், தேக்கடியில் உள்ள அறைகளை சீரமைக்கவும் தமிழகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இதைத்தவிர அணை பராமரிப்பு பணிக்கான உபகரணங்களை கொண்டு செல்ல வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு அணை சாலை அமைத்தல், 15 மரங்களை அகற்றவும் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. …

The post முல்லைப் பெரியாறு பராமரிப்பில் கேரள அரசு முட்டுக்கட்டை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Mulla Periyar ,Tamil Nadu govt ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,Mullaipperiyar dam ,Kerala government ,
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!