×

மக்களவை தேர்தலில் பின்னடைவால் மகாராஷ்டிரா தேர்தல் பாஜ அதிரடி வியூகம்: மும்பையில் தீவிர ஆலோசனை

மும்பை: மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜ அதிரடி வியூகங்களை வகுக்க தீவிர ஆலோசனை நடத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் 288 எம்எல்ஏக்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபரில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் தற்போது பாஜவுக்கு 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜ பெரும் பின்னடைவை சந்தித்தது. கடந்த 2019ல் மகாராஷ்டிராவில் 48 மக்களவை தொகுதிகளில் 23 இடங்களை கைப்பற்றிய பாஜவுக்கு இம்முறை வெறும் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதன் கூட்டணிகளான ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் சேர்த்து பாஜவின் மகாயுதி கூட்டணிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அதே சமயம் எதிர்க்கட்சிகளான உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசின் மகா விலாஸ் அகாடி கூட்டணிக்கு 30 இடங்கள் கிடைத்தன. மக்களவை தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக பாஜ தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதற்காக மும்பையில் நேற்று முன்தினம் இரவு முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. 5 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் மாநில பொறுப்பாளர்களான ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜ பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மாநிலத தலைவர் சந்திரசேகர் பவான்குலே, மும்பை பிரிவு தலைவர் ஆஷின் ஷெலர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசித்துள்ளனர்.

The post மக்களவை தேர்தலில் பின்னடைவால் மகாராஷ்டிரா தேர்தல் பாஜ அதிரடி வியூகம்: மும்பையில் தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : BJP ,Maharashtra ,Lok Sabha ,Mumbai ,
× RELATED மீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம்...