×

விபத்தில் சிக்கியதால் சேற்றில் சிக்கி தவித்த நாய் பத்திரமாக மீட்பு: புளூகிராசிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பில் விபத்தில் சிக்கி கால்கள் உடைந்து 12 மணிநேரமாக சேற்றில் தவித்த நாயை மாநகராட்சி ஊழியர் பத்திரமாக உயிருடன் மீட்டார். சென்னையில் கடந்த 5 நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்று முன்தினம் இரவு முதல் ஓரளவிற்கு நின்று தற்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் சீர்செய்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட 73வது வார்டு புளியந்தோப்பு மன்னார் சாமி தெரு மற்றும் டிகாஸ்டர் ரோடு சந்திப்பு பகுதியில் மின்மாற்றி உள்ள இடத்தில் நாய் ஒன்று சேற்றில் சிக்கி உயிருக்கு போராடுவதாக மாநகராட்சி சாலைப்பணியாளர் பாஸ்கருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பாஸ்கர் நாயை மீட்க முயற்சி செய்தார். ஆனால், ஏற்கனவே நாயின் 2 கால்கள் அடிபட்ட நிலையில் முழுவதுமாக நாய் சேற்றில் சிக்கிக் கொண்டிருந்தது. மேலும், நாயை தொட்டால் அது கடிக்கும் என்று பயந்து பொதுமக்கள் பலரும் அஞ்சினர். பிறகு சேறு இருந்த இடத்தில் சிமென்ட் சிலாப் போட்டு பொதுமக்களின் உதவியுடன் மாநகராட்சி ஊழியர் பாஸ்கர் நாயை பத்திரமாக மீட்டார். நாயின் 2 கால்களும் அடிபட்டு இருந்ததால், புளூகிராஸ் அமைப்பிற்கு தகவல் தெரிவித்து, மீட்கப்பட்ட நாய் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நாயை இடித்து தள்ளியதால் 2 கால்களும் அடிபட்டு நாய் சேற்றில் சிக்கியிருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். சுமார் 12 மணி நேரம் கழித்து சேற்றில் சிக்கிய நாய் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது….

The post விபத்தில் சிக்கியதால் சேற்றில் சிக்கி தவித்த நாய் பத்திரமாக மீட்பு: புளூகிராசிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Bluegrass Perambur ,Pulianthop ,Bluegrass ,Dinakaran ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...