×

பேரல்களில் கறிவேப்பிலை… வாட்டர் பாட்டில்களில் ஸ்ட்ராபெர்ரி!

அசத்தும் 70 வயது லிஸ்ஸி…வெங்காயமும், உளைக்கிழங்கும் வாங்க மட்டுமே நான் மார்க்கெட் போறதுண்டு. மத்தபடி எல்லா காய்கறிகளும் எங்க வீட்டு மாடியிலேயே வளருது’ பெருமையாகச் சொல்கிறார் கர்நாடகா, பெங்களூரைச் சேர்ந்த லிஸ்ஸி ஜான். 70 வயது லிஸ்ஸி கடந்த 25 வருடங்களாக ஸ்நாக்ஸ் தொழில் நடந்தி வந்தவர். இப்போது போதும் என தனக்குப் பிடித்தமான மாடித் தோட்டம் அமைப்பதில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டுவருகிறார். ரொம்ப வருஷக் கனவு இது. என் அப்பா டீச்சர் மேலும் விவசாயத்திலே அதீத ஈடுபாடு கொண்டவர். அவரைப் பார்த்தே வளர்ந்த எனக்கு நாமளும் இப்படி ஒருநாள் தோட்டம் அமைச்சு அதிலே விளைகிற காய்கறிகள், பழங்களை வீட்டுக்குப் பயன்படுத்தணும்னு நினைப்பேன். ஆனால் என் கணவர் வேலை காரணமா நாங்க ஒரு இடத்திலே நிலையா இருக்கக்கூடிய வாய்ப்புக் கிடைக்கலை. ஒருவழியா 1998ல் தான் பெங்களூருவில் செட்டில் ஆனோம். பெரிய அளவிலே தோட்டம் அமைக்கணும்னுதான் தீர்மானிச்சேன். ஆனால் பெங்களூரு வீட்டில் போதுமான இடவசதி இல்ல. ஆனாலும் கிடைச்ச 1200ச.அடியிலே என்ன செய்யலாம்னு யோசிச்சு அதிலே மாடித் தோட்டம் அமைச்சேன். 1000ச.அடியிலே தோட்டம் மீதிப் பகுதியிலே சோலார் பேனல், வாட்டர் டேங்க் அமைச்சேன். ஆரம்பத்திலே தக்காளி, மிளகாய், கீரைகள் எல்லாம் பயிரிடத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமா காய்கறிகளையும், பழங்களையும் பயிரிட ஆரம்பிச்சேன்.’ என்னும் லிஸ்ஸி தனது மாடித்தோட்டத்திற்கு அடித்தளமாக வாட்டர் பாட்டில்கள், பிவிசி குழாய்கள், பெரிய அரிசி டப்பாக்கள், வாளிகள், வாட்டர் பேரல்கள் என அனைத்தையும் தாவரங்கள் வளர்க்க தளமாக மாற்றியிருக்கிறார். ‘எதையும் வீணாக்காதே’ இதுதான் எங்க அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த மந்திரம். டிரம், விதை, செடி பேக்குகள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், பிவிசி குழாய்கள், வாட்டர் பாட்டில்கள் எல்லாமே எனக்கு செடி வளர்க்கப் பயன்படுது. ஒரு நாளைக்கு 1கிலோ வீதம் காய்கறிகள், பழங்கள் எங்களுக்குக் கிடைக்கிறது. ஒரு அஞ்சு பேர் கொண்ட குடும்பத்துக்கு இது அதிகம். அதிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளோ, கெமிக்கலோ எதுவும் இல்லாத இயற்கையிலேயே வளர்க்கப்பட்ட காய்கறிகள். நிறைய பேர் என் கிட்ட ’என்னென்ன காய்கறிகள் வளர்க்கறீங்க?’ன்னு கேட்கறாங்க. என்ன இல்லைன்னு மட்டும்தான் நான் சொல்வேன். உருளைக் கிழங்கு, வெங்காயம் இது ரெண்டு மட்டும்தான் வெளியே வாங்கறோம். அந்த ரெண்டுமே வீட்டுத் தோட்டப் பயிர்கள் கிடையாது. அதனாலேயே இன்னமும் அந்த ரெண்டு மட்டும் பயிரிட முடியலை’ என்னும் லிஸ்ஸியின் வீட்டில் கீரைகள், பீன்ஸ்கள், பயறு வகைகள், பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, மாதுளை, மாம்பழம், ஜாமூன், திராட்சை, கஸ்டர்ட் ஆப்பிள், வாட்டர் ஆப்பிள், வெஸ்டர்ன் செர்ரி, அவகேடோ, டிராகன் பழங்கள், ஆரஞ்சு, ப்ளாக்பெர்ரி, மல்பெரி என அத்தனையும் லிஸ்ஸியின் மாடியில் விளைகின்றன.‘ எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்களில் நம்பகமான விவசாயக் குழுக்கள் மூலமாகவோ நான் காய்கறி விதைகள்/கன்றுகளை வாங்கிக்கறேன். மேலும், பழ மரங்களைப் பொறுத்தவரை, நான் டிராவல் செய்கிற பல இடங்கள்ல இருந்து மரக்கன்றுகளை சேகரிக்கிறேன். தக்காளி, கத்தரி, பட்டாணி, ஓக்ரா, பீன்ஸ், கீரை, மிளகாய், பாகற்காய், சௌ சௌ, ஏர் உருளைக்கிழங்கு, வெள்ளரி, முருங்கைக்காய்,  ப்ரோக்கோலி, காலிஃபிளவர் இப்படி எல்லாமே என் மாடியிலே கிடைக்கும். ஏன் மிளகு, மஞ்சள், இஞ்சி, திப்பிலி (நீண்ட மிளகு) மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்கள் கூட நீங்க பார்க்கலாம்’ என்னும் லிஸ்ஸி இந்த மாடித் தோட்டத்திற்காகவே கர்நாடகாவின் தோட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.‘izy கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்வேறு அமைப்புகளின் மாடித் தோட்டம் முயற்சிக்காக பல விருதுகள் கிடைச்சிட்டு இருக்கு. சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் விருது, ஹரிதா கேரளா விருது, நம்பிக்கை அறக்கட்டளை விருது மற்றும் மாத்ருபூமி விருது உட்பட நான் இதுவரைக்கும் 15க்கும் மேலான விருதுகள் வாங்கியிருக்கேன்” என்கிறார்.‘அதிக கடின உழைப்பு, கொஞ்சம் பொறுமை இருந்தாலே, குறுகிய காலத்திலே கூட யார் வேணும்னாலும் அவங்கவங்களுக்குத் தேவையான காய் கனிகளை அவங்களே வளர்க்க முடியும். வெறும் மிளகாய் செடியாக இருந்தாலும், அது பூக்கும்போதோ அல்லது முதல் காய் காய்க்கும்போதோ, அது நமக்கு ஒருவித மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும் அந்த மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் எதைக் கொடுத்தாலும் ஈடாகாது. இந்த எண்ணம்தான் என்னை தொடர்ந்து தோட்டப் பராமரிப்பில் ஈடுபடுத்திட்டே இருக்கு’. பெருமையும், மகிழ்வும் ஒருசேர பேசுகிறார் லிஸ்ஸி ஜான். தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post பேரல்களில் கறிவேப்பிலை… வாட்டர் பாட்டில்களில் ஸ்ட்ராபெர்ரி! appeared first on Dinakaran.

Tags : Lizzie ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...