×

பரங்கிமலை ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு தனிப்படை அமைப்பு: மாணவி கொலையை தொடர்ந்து நடவடிக்கை

ஆலந்தூர்:  பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும் கல்லூரி மாணவர்களுக்குள் ரயில் நிலையங்களில் மோதலை தவிர்ப்பதற்கும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ம்தேதி கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையத்தில் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், கல்லூரி மாணவர்களுக்குள் மோதலை தடுக்கும் வகையிலும்  ரயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட  முதன்மை ஆணையர் செந்தில்குமரேசன் உத்தரவின்பேரில்  பரங்கிமலை ரயில்வே  பாதுகாப்பு படை ஆய்வாளர் விஜயகுமார் எஸ்ஐ சிவேஸ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் படிக்கட்டில் தொங்கியபடியும், கால்களால் தரையில் தேய்த்த படியும் மின்சார ரயில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை அதிரடியாக பிடித்து, படிக்கட்டில் தொங்குவதால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகள் மற்றும் தண்டனைகள் குறித்து விளக்கினர். பின்னர், ஆய்வாளர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மீது இதுவரை 301 வழக்குகள் பதிவுசெய்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் படிக்கட்டில் பயணம் மற்றும் நடைமேடையில் கால்களை தேய்த்தபடி பயணம் செய்யும் சிறார்களின் பெற்றோர்களை நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இனிவரும் காலங்களில் மீண்டும் ரயில் படிக்கட்டில் பயணமோ, கால்களை தேய்த்த படியோ சென்றால் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். ரயிலில் வெடிபொருட்களையோ அல்லது பட்டாசு பொருட்களையோ கொண்டு சென்றால் ரயில்வே சட்டம் பிரிவு 164ன் கீழ் கைது செய்து, அபராதம் ரூ.1,000 அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். ரயில் பயணிகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதும் இந்த தனிப்படையின் பணியாகும்.  இவ்வாறு அவர் கூறினார்….

The post பரங்கிமலை ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு தனிப்படை அமைப்பு: மாணவி கொலையை தொடர்ந்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Special Persons Organisation for Women Safety ,Parankimalai ,Railway Station ,Alandur ,Chennai ,Parangimalai Railway Station ,
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து