×

பாலியல் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து மன அழுத்தம் போக்கும் வகையில் குழந்தைகள் இல்லம் செயல்பட வேண்டும்-கலெக்டர் பேச்சு

ராணிப்பேட்டை : குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து மன அழுத்தத்தை போக்கும் வகையில் குழந்தைகள் இல்லம் செயல்பட வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நிர்வாகிகளுக்கு இளைஞர் நீதி சட்டம் மற்றும் இல்லத்தில் குழந்தைகள் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி திறன் வளர்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:குழந்தைகள் இல்லத்தை நிர்வாகிக்கும் அரசு மற்றும் அரசு சாரா இல்லங்களை சேர்ந்த நிர்வாகிகள் திறன் வளர்ப்பு பயிற்சியில் இல்லங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளை எவ்வாறு சட்ட விதிப்படி சேர்ப்பது, அங்கிருந்து வெளியே அனுப்புவது குறித்த நடைமுறைகளை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். சட்ட சிக்கல்கள், விதுமுறைகளை  எத்தகைய படிவங்களை முறையாக பராமரிக்க வேண்டும், என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இளைஞர் நீதி சட்டம் 2015ன் படி இல்லங்கள் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் சேர்க்கப்படும்போது குழு பரிந்துரை கடிதம் விசாரணை கடிதம் இவைகளின்படி இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க இல்லங்களில் சேர்க்கும்பொழுது குழந்தைகள் குறித்த தகவல்களை விளம்பரப்படுத்தக்கூடாது, என்பதை ஊடகப்பிரிவுகளுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு விதமான பிரச்னைகள், துன்புறுத்தல் போன்றவற்றில் இருந்து மீட்கபட்டு நீதிமன்ற வழக்குகள் நடைபெற்று தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக இல்ல நிர்வாகிகள் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், பிரச்னைகளுக்கு சமூகம் காரணமாக உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குழந்தைகளை பாதிக்கிறது. இதனால் குழந்தைகள் வழிதவறி குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எனவே, குழந்தைகளை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள், நல்வழிப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாடு குழந்தைகள், மாணவர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து மன அழுத்தத்தை போக்கும் வகையில் குழந்தைகள் இல்லம் செயல்பட வேண்டும். நீதியியல் குறித்த சந்தேகங்கள், குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்து இந்த திறன் பயிற்சி வகுப்பில் முழுமையாக சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம், சிறார் நீதி குழும உறுப்பினர் தேவ ஆரோக்கிய மேரி, வக்கில் சாய் பிரசாத், டாக்டர் கோகுலன், குழந்தைகள் நல அலுவலர்கள் ஏகாம்பரம், நளினி, நிஷா மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

The post பாலியல் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து மன அழுத்தம் போக்கும் வகையில் குழந்தைகள் இல்லம் செயல்பட வேண்டும்-கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ranipette ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...