×

மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவேன்; கைது செய்தாலும் பயப்பட மாட்டேன்: பவன்கல்யாண் ஆவேசம்

திருமலை: பாஜகவுடன் பேக்கேஜ் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவேன். இதற்காக என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் பயப்பட மாட்டேன் என்று நடிகர் பவன்கல்யாண் ஆவேசமாக கூறினார். ஆந்திராவில் 3 தலைநகரம் அமைப்பதற்கு ஆளுங்கட்சி முயற்சித்து வருகிறது. இதற்கு சந்திரபாபு மற்றும் நடிகர் பவன்கல்யாண் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன்கல்யாணை வரவேற்க அக்கட்சியினர் திரண்டிருந்தபோது, ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் ரோஜாவையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனசேனா கட்சியை சேர்ந்த 95 பேரை போலீசார் கைது செய்தனர். பாஜவின் ‘பி’ டீமாக நடிகர் பவன்கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும் பாஜவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நேற்று நடிகர் பவன்கல்யாண் பேசுகையில், ‘நான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பி டீமாக உள்ளேன் எனக்கூறுவதை ஏற்க முடியாது. இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். இதனிடையே நேற்றிரவு முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை, பவன் கல்யாண் அவசரமாக சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசினர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது சந்திரபாபு கூறுகையில், ‘தற்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை உதாசீனப்படுத்துகிறது. எதிர்கட்சிக்கு மதிப்பு அளிப்பதில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினாலும் ஜாதி வாரியாக பிரிவினை உண்டாக்கி குழப்பம் ஏற்படுத்துகின்றனர். பவன்கல்யாண் மனிதாபிமானம் உள்ளவர். ஜனநாயகத்திற்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை வம்புக்கு இழுப்பது சரியல்ல. சினிமாவில் மட்டுமே வசனம் பேசுவார், எதிரிகளை பந்தாடுவார் என நினைக்காதீர்கள், நிஜத்திலும் செய்துவிடுவார்’ எனக்கூறினார். பின்னர் பவன்கல்யாண் கூறுகையில், ‘எனக்கு பாஜக மற்றும் மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் நான் பேக்கேஜ் வாங்கிவிட்டேன் என்றும் பாஜகவின் பி டீம் என்றும் கூறுவது சரியல்ல. எனக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளநிலையில் பாஜகவுடன் பேக்கேஜ் வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உடனடியாக முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு எப்போதும் துணைநின்று பிரச்னைகளை தீர்க்கவே வந்துள்ளேன். அதற்காக 20 ஆண்டுகள் ஆனாலும் போராடுவேன். மக்கள் பிரச்னை குறித்து பேசினால் ஆளுங்கட்சி அரசியலாக்குகிறது. ஆளும் ஜெகன் அரசு என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் பயப்படமாட்டேன் என்றார்….

The post மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராடுவேன்; கைது செய்தாலும் பயப்பட மாட்டேன்: பவன்கல்யாண் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Bhavangalyan ,Thirumalai ,
× RELATED ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம்...