×

ஸ்டெல்லா டீச்சர் இவங்கதான்!

ஷிப்பிங் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கக்கூடிய வேலை. அன்பான குடும்பம், அறிவான மகன், பாச மழை பொழியும் நலம் விரும்பிகள் என்று இறைவன் ஆசியால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துவரும் நான் சினிமாவில் நடிப்பேன் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது சினிமா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன் என்று சிலிர்ப்புடன் பேச ஆரம்பிக்கிறார் லிஸி ஆண்டனி. ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று கோடம்பாக்கத்துக்கு பெருமை சேர்த்த படங்களில் அம்மாவாக, அண்ணியாக நடித்து அசத்தியவர். பிஸியாக இருந்த லிஸியிடம் பேசினோம்.

சினிமா வாய்ப்பு எப்படி அமைந்தது?

நண்பர்கள் மூலம் டைரக்டர் ராம் சாரின் அறிமுகம் கிடைத்தது. ‘தங்க மீன்கள்’ படத்தில் ஸ்டெல்லா மிஸ் என்ற கேரக்டருக்கு என்னுடைய தோற்றம் சரியாக இருப்பதாக அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். ராம் சார் ஆடிஷனுக்கு அழைப்பு கொடுத்தார். எனக்கு நடிப்பு வருமா, வராதா என்று எனக்கே தெரியாது என்பதால் நடிக்கமாட்டேன் என்று சொல்வதற்காக ராம் சார் அலுவலகத்துக்குப் போனேன். ஆனால் ராம் நம்பிக்கை கொடுத்தார். எனக்கு நடிப்பு வரும் என்று என் மீது நம்பிக்கை வைத்த ராம் சார் தான் என்னுடைய சினிமா குரு.

உங்க பின்னணி?

பூர்வீகம் கேரளா. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை. காமர்ஸில் பிஜி முடிச்சிருக்கேன். டீச்சர் டிரைனிங்கும் பண்ணியிருக்கேன். சினிமாவுக்கும் எங்கள் குடும்பத்தும் ரொம்ப தூரம். டிவியைக்கூட நியூஸ் பார்க்க மட்டும்தான் பயன்படுத்துவோம். எங்கள் குடும்பத்தில் கல்வித் துறை, பிசினஸ், ஐ.டி. துறை என்று பல்வேறு துறைகளில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருப்பது நான் மட்டும்தான்.

எத்தனை படங்கள் நடிச்சிருக்கீங்க?

இருபத்தி ஐந்தை நெருங்கிக்கிட்டு இருக்கேன். ‘தங்க மீன்கள்’ படத்தில் ஆரம்பித்த என்னுடைய சினிமா பயணம் ‘தூங்கா நகரம்’, ‘குக்கூ’, ‘பாம்புசட்டை’, ‘தரமணி’ ‘பரியேறும் பெருமாள்’, ‘பேரன்பு’, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று குறுகிய காலத்தில் இவ்வளவு படங்கள் பண்ணிட்டேன்.

சினிமாவில் லேட்டாக என்ட்ரி கொடுத்துள்ளோமே என்று நினைத்ததுண்டா?

பிளஸ் டூ படிக்கும்போதே ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த அழைப்பு எனக்கும் குடும்பத்தினருக்கும் பெரிய ஷாக்காக இருந்தது. கோரஸாக ‘நோ’ சொல்லி அனுப்பி வைத்தோம். இப்போ அப்படி இல்லை. லைஃப்ல செட்டிலாகிவிட்டேன். மகன் வளர்ந்துவிட்டான். கணவரும் மோடிவேட் பண்ணுகிறார். குடும்பத்தில் நானிருந்து செய்ய வேண்டிய வேலைகள் என்று எதுவும் இல்லை. வீட்ல உள்ள எல்லோரும் சப்போர்ட் பண்ணுகிறார்கள். லேட்டா வந்தோம்னு வருத்தமெல்லாம் படலை.

‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில்தான் ரொம்ப கவனிக்கப்பட்டிருக்கீங்க..

யெஸ். இதுவரை நடிச்ச படங்களில் எல்லாமே நெகடிவ் கலந்த கேரக்டர்தான் அதிகம் பண்ணியிருக்கிறேன். ஸ்ட்ராங் ரோல்னாதான் என்னை கூப்பிடறாங்க. இந்தப் படத்திலேதான் முதன்முறையா மேக்கப்போடு நடிச்சேன். லண்டன் ரிட்டர்ன் கேரக்டர், இல்லத்தரசி என்று இரண்டு டைமன்ஷன் இருந்ததால் என்ஜாய் பண்ணி நடிக்க முடிந்தது. நிஜத்தில் என்னமாதிரி உடுத்து வேனோ, அதுபோல நான் நானாகவே நடிக்க இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அனுமதிச்சாரு.

கேரக்டருக்காக ஹோம்வொர்க் பண்ணுறதுண்டா?

இயக்குநர்களைப் பொறுத்துதான். சில இயக்குநர்கள் எதையும் யோசிக்காமல் வெறுமையான எண்ணத்தோட வாங்க என்பார்கள். சிலர் அந்தக் கேரக்டராகவே வாங்க என்று சொல்வார்கள். யாரிடம் வேலை செய்கிறோமோ அவர்களே நம்முடைய நடிப்பை தீர்மானிப்பார்கள். இது சுயமாக முடிவெடுக்கும் விஷயம் அல்ல. அப்போதுதான் இயக்குநர் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்க முடியும். சில இயக்குநர்கள் ஹோம் ஒர்க் எடுக்கிற மாதிரி ரோல் கொடுப்பாங்க. ஒரு படத்தில் போலீஸ் கேரக்டர் பண்ணினேன்.

அந்த இயக்குநர் ஒருநாள் பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கு என்னை அழைத்துச் சென்றார். சினிமாவில் நாம் பார்க்கும் மாதிரி நிஜ போலீஸ் இருக்கமாட்டார்கள். நிஜ போலீஸைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஆயிரம் வழக்குகள் இருப்பதால் எமோஷனலாக டீல் பண்ணமாட்டார்கள். ஏன்னா, அவங்க தினமும் பல்வேறு வழக்குகளைச் சந்திக்கிறார்கள். அப்படி போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த அனுபவங்கள் போலீஸ் கேரக்டரில் நடிப்பதற்கு உதவியாக இருந்தது.

உங்க தாய்மொழியில் நடிக்கலைன்னு வருத்தமா?

நானென்று இல்லை. எந்த மொழி நடிகையாக இருந்தாலும் மலையாளத்தில் நடிக்க விரும்புவார்கள். அங்கேதான் பெண்களை மையமாக வைத்து அதிகமாக கதை எழுதுவார்கள். கதாபாத்திரமும் அழுத்தமாக இருக்கும். இதுவரை நானாக அங்கே எந்த வாய்ப்பையும் கேட்கவில்லை. நண்பர்கள் சிலர் தாய்மொழியான மலையாளத்தில் நடித்தால்தான் தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள். ஆனா, எனக்கு தமிழ்தான் தாய்வீடு.

இப்போ சிவகார்த்திகேயன் படத்துலேயும் நடிக்கறீங்க?

ஆமாம். முதன்முதலா ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துலே காமெடி பண்ணுறேன். நயன்தாரா, தம்பி ராமையா, சதீஷ், ஜான்விஜய் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம். ஒவ்வொருத்தரும் நான்-ஸ்டாப்பாக கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது புது அனுபவம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே பதட்டமடைஞ்சுட்டேன். இயக்குநர் எம்.ராஜேஷ்தான் சகஜமாக்கி கூலாக வேலை வாங்கினார்.

அடுத்து?

நிறைய இருக்கு. ‘நாடோடிகள்-2’ படத்தில் மிகவும் வித்தியாசமான ரோல், ‘K 13’, படத்தில் போலீஸ் கேரக்டர். அது மட்டுமில்லாமே, இரண்டு பெரிய இயக்குநர்கள் படம் பேச்சுவார்த்தையில் இருக்கு. ‘Igloo’ என்ற ஆன்லைன் படமும் பண்றேன்.

நீங்க மிஸ் பண்ண வேடம்?

நான் சினிமாவுக்கு வந்ததுமே முக்கியமான ஒரு கேரக்டரை மிஸ் பண்ணிட்டேன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் வரும் அக்கா கேரக்டருக்கு இயக்குநர் சரவணன் என்னைத்தான் முதலில் தேர்வு செய்து வைத்திருந்தார். கால்ஷீட் முடிவு செய்யாததால் ‘தங்கமீன்கள்’ படப்பிடிப்புக்கு போய்விட்டேன்.

படப்பிடிப்பில் இருக்கும் போது சரவணன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை. ஒரு வெற்றிப் படத்தை மிஸ் பண்ணிவிட்டோமே என்ற கவலை இருந்தது. அந்தக் கவலை நீங்குமளவுக்கு சமீபத்தில் சரவணன் சார் தன்னுடைய புதிய படத்தில் வெயிட் ரோல் கொடுத்திருக்கிறார்.

இலட்சியம்?


இப்போது சினிமா இல்லாத வாழ்க்கையை என்னால் யோசிக்கமுடியவில்லை. நடித்துக் கொண்டே இருக்கணும் என்பது என் விருப்பம். சினிமாவில் நல்ல மரியாதை கிடைத்துள்ளது. அதை தக்க வைக்கணும். சினிமாவில் கஷ்டப்படுகிறவர்கள் அதிகம். நான் எளிதாக வந்துவிட்டேன். அதுக்காக அலட்சியம் பண்ணமாட்டேன். ஒவ்வொரு படத்திலும் நூறு சதவீத உழைப்போடு உழைப்பேன். நான் ஏற்றுக் கொள்ளும் கேரக்டருக்கு நியாயம் பண்ணுவேன். வெர்சடைல் ஆக்டர் என்ற பெயர் வாங்கணும். அஜீத், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க தயார்.

அதில் நிபந்தனைகள் எதுவும் இல்லை. அழுத்தமான வேடம் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம். நீலாம்பரி கேரக்டர் மாதிரி கொடுத்தால் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அந்த கேரக்டரில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் பாக்கியம் பெற்றவளாக இருந்தாலும் அந்த மாதிரி கேரக்டர் பண்ணுவதற்கு ரொம்பவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லோருக்கும் அது வாய்க்காது. அதுக்கான திறமை இருந்தால் தான் அழைப்பு வரும். எனக்கு அந்த எல்லையைத் தொட ஆசை. அந்த இடத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சினிமாவில் யாரை ஃபாலோ பண்ணுகிறீர்கள்?

எனக்கான இன்ஸ்பிரேஷனை எனக்குள்ளேயே தேடுவேன். மற்றவர்களின் பயணம் வேறு. என்னுடைய பயணம் வேறு. என்னுடைய பயணத்தில் நான்தான் பயணம் செய்ய வேண்டும். நான் நடிக்க ஆரம்பித்தபோது என்னைப் பார்த்துச் சிரிக்காதவர்களே இல்லை. உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று சொன்னார்கள். அந்த சமயத்தில் நான் நல்ல சம்பளம், உயர் பதவியில் இருந்தேன். ஆனால் I never give up. I keep myself. ஊரே சிரித்தாலும் பரவாயில்லை என்று என்மீது நம்பிக்கை வைத்து சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்னைக் கைவிடவில்லை. நான் எதிர்பார்க்காத அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.

Tags : Stella Teacher ,
× RELATED நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான்